பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்547

அறிவும் அவ்வுடலளவாய் வசிப்புண்டு ஏகதேசமாகவே காணப்படும். அவ் வேகதேசமாகிய உடல் இருப்பவே தான் மட்டும் அதன்பாற் பற்றொழிந்து எழுந்து வியாபகமாகிய இறைப்பொருளில் கலந்து காணும்பொழுது திருத்தமுற்ற அவ்வறிவுதானும் எங்குஞ்செறிந்த அம்முழுமுதற் பொருள் போன்றே வியாபகமாதல் காணப்படும்.

(வி - ம்.) ஏகதேசம் - ஓரிடத்திருத்தல். வியாபகம் - எங்கு நிறைதல். உயிர் அறிவு உடலைப் பற்றியபொழுது ஏகதேசமாகவும் இறைவனைப் பற்றியபோது வியாபகமாகவுமிருக்கும் என்றவாறு.

(332)

 அறம்பா வங்கள் பெரிதாற்றி யலங்குந் துறக்க மளறெய்தித்
 திறம்பா வின்பம் பெருந்துன்பந் திளைத்தோர்க் கங்கட் பயவாமைப்
 புறம்பாய் நின்ற வினையெச்சம் புணரி வயல்கான் மலைவளங்கள்
 பறம்பா நின்ற மண்ணுலகிற் பற்றுந் திறமும் பகர்வாமால்.

(இ - ள்.) அறங்களையும் தீவினைகளையும் மிகவும் செய்து அவற்றின் பயனாகிய பிறழாத இன்பத்தையும் பெருந்துன்பத்தையும் நிரலே ஒளியுடைய துறக்கத்தினும் நிரயத்தினும் புகுந்து நுகர்ந்தவர்கட்கு அவ்விரண்டிடத்தும் தத்தம் பயனைக் கொடாமல் வேறாக எஞ்சிநின்ற வினைகள். கடலும் வயலும் காடும் மலையுமாகிய இவற்றின் வளங்கள் பரவிய இம்மண்ணுலகத்தே வந்து அவ் வுயிர்களைப்பற்றி நுகர்விக்குமியல்பும் இனிக் கூறுவாம்.

          (வி - ம்.) அலங்குதல் - ஒளிவிடுதல். "அலங்கு வெண்மதி" என்னுஞ் சிந்தாமணி (131 - 214) யினும் அஃதப் பொருட்டாதலறிக, பறம்புதல் - பரவுதல்.

(333)

 துறக்க மாண்ட வறவோர்க டுய்ப்பங் கறலு மண்ணுலகில்
 பிறக்க மாண்ட மறையோராய்ப் பிறந்து வளங்க ளினிதீண்டச்
 சிறக்கு மொழுக்கந் தலைநின்று தேவர் பிரானை வழிபட்டாங்
 குறக்கம் விழிப்பென் றிரண்டற்ற வோவா வின்பத் துறைபடிவார்.

(இ - ள்.) அறம் பெரிதும் ஆற்றினமையால் துறக்கத்தே புக்கு இன்புற்றிருந்த சான்றோர் அந்நல்வினைப் பயன் முழுதும் அவ்விடத்தே நுகர்ந்து முடிந்தபின்னர், இந்நிலவுலகிலே ஒளிமாட்சிமைப்பட்ட அந்தணராகப் பிறந்து செல்வமுடையராய் நல்லொழுக்கத்தின்கண் நன்கு நிலைத்துத் தேவதேவனாகிய இறைவனை வழிபட்டு அவ்விறைவன் திருவடியிலே இரண்டறக் கலந்து உறக்கமும் விழிப்புமில்லாத முடிவற்ற வீட்டின்பத்திலே அழுந்தாநிற்பர்.

(வி - ம்.) துய்ப்பு - நுகர்ச்சி. பிறக்கம் - ஒளி. தேவர்பிரான் - இறைவன். ஓவா - ஒழியாத.

(334)

 அள்ள லழுந்தும் பாதகத்தோ ரருந்த லவணற் றிடவொழிந்து
 பள்ள விரிநீர்க் கடலுலகிற் பயிலுந் தருவா திகளாகி
 மெள்ள வுயர்ந்து மானிடத்தின் மேவுங் காலுங் குணமுறுப்பு
 நள்ளும் வெறுக்கை யிவையின்றி நவையே யுழப்பர் மாதவனே.