பக்கம் எண் :

552தணிகைப் புராணம்

(இ - ள்.) இனிய தண்ணீர்ப்பந்தரைச் சிதைத்தவன், வயிற்றின்கண் நீர்க்கோவை என்னும் நோயுடையன் ஆவன். ஆவினைக் கொன்றவன் பிறக்கும்போதே குருடனாய்ப் பிறப்பன். ஆக்களைத் துன்புறுத்தியவன், கோணியமூக்குடையன் ஆவன். பாதுகாத்தற்குரிய பிற வுயிர்களின் ஊன் முதலிய உணவினையுண்டவன், பொருந்திய கண்டமாலை என்னும் நோயுடையன் ஆவன். நெஞ்சம் தேம்புதற்குக் காரணமான கலகம் விளைப்பவன் அழுகிய வாயுடையன் ஆவன். வெகுளியை மேற்கொண்டவன் புலையனாய்ப் பிறப்பன்.

(வி - ம்.) தோற்றம் ஆம்பொழுது - பிறக்கும்பொழுதே.

(344)

வேறு

 வெள்ளி பட்டிவை கள்ளினோன்
           குட்டநோய் விரவினன் சாந்தாற்றி
 கொள்ளு மேழைவா மனன்பெரு
           மஞ்சிகள் கோளன்றூ சினைவிற்போன்
 எள்ளும் வேட்டுவ னீயஞ்சா
           மரைமுதல் விலைசெய்தா னிருங்கானம்
 நள்ளு மாசுணங் கூலிநல்
           காதவன் பிறர்பணி நயப்போனாம்.

(இ - ள்.) வெள்ளி பட்டு முதலியவற்றைக் களவு கொண்டோன் குட்டநோய் கலக்கப்பட்டவன் ஆவன். ஆலவட்டங் களவு கொண்டோன், குறளனாய்ப் பிறப்பன். கோட் சொல்லுபவன் பெரியநாவிதனாவன், ஆடையினை விற்போன் இகழ்தற்குரிய வேடனாவன். ஈயம் சாமரை முதலியவற்றை விற்போன் பெரிய காட்டையடையும் பாம்பாகப் பிறப்பன், கூலிகொடாதவன் பிறர்பால் கூலிபெறும் அடிமையாகப் பிறப்பன்.

(வி - ம்.) கள்ளுதல் - திருடுதல். வாமனன் - குறளன். மஞ்சிகன் - நாவிதன். மாசுணம் - பாம்பு.

(345)

வேறு

 கற்புளார் செயலை யிழித்தவன் காக்கைக்
           கண்ணன்வா னவர்சிவ யோகர்க்
 கற்பிலார் கோடும் வாயின ரீவார்க்
           கரும்பழு துரைப்பவர் புழுக்கள்
 பற்படு நோயர் சமயமாய்த் தவர்பா
           தகர்த்தெறுங் கொலைவிலக் கினர்கள்
 பொற்பறக் கோடும் வழக்குரைத் தோரும்
           பொருஞ்சல வாதரா யிழிவார்.