பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்555

மிகப்பலவாகிய தீவினைகளைச் செய்தோர் மிகப்பலவாகியமுறை புலைஞராய்ப் பிறவாநிற்பர்.

(வி - ம்.) பவ்வீப்புழு - மலப்புழு. பாதகக்கு - பாதகத்திற்கு. இழிஞர் - புலையர்.

(350)

 ஓங்குபா தகமூன் றவற்றின மூன்றென்றுரைத்தமூ விருதிறத் தொன்று
 தாங்குமுன் னுடலிற் புரிந்தவ னதுவே சார்ந்தமற் றுடலினும் புரிவான்
 தீங்கிது கழுவாய் நூன்முறை யாற்றிற் றீருந்தீ ராதுஞற் றானேல்
 வீங்கிய செல்ல னரகுழந் துரைத்த வீறிலாப் பவமெடுத் துழல்வான்.

(இ - ள்.) கொடுமையாலே உயர்ந்த தீவினைகள் மூன்றுவகைப்படும்; அவற்றிற்கு இனமான தீவினையும் மூன்றுவகைப்படும் என்று யாம் ஈண்டுக்கூறிய இருவகைத் தீவினைகளில் வைத்து ஒருவன் தான் எடுத்திருந்த முற்பிறப்புடலின்கண் யாதேனும் ஒன்றைச் செய்தவன் இறந்து மீண்டும் எடுத்த மறுப்பிறப்புடலினும் அதனையே மேற்கொண்டு செய்யாநிற்பன். இத்தகைய வாதனைப் பழக்கமான தீமை நூல்கள் விதித்த முறைப்படி கழுவாய் செய்யின் தீர்ந்தொழியும். செய்யானெனின், நிரயம் புகுந்து மிக்க துன்பத்தையே நுகர்ந்து யாம் ஈண்டுரைத்த முடிவிலாப் பிறப்புக்களை எடுத்து எடுத்து வருந்தாநிற்பன்.

(வி - ம்.) முன்னுடல் - முற்பிறப்பிலிருந்த வுடல். தீங்காகிய இஃதென்க. செல்லல் - துன்பம். பவம் - பிறப்பு.

(351)

 புண்ணியம் பாவ மிதுவிது வென்றும்
           புரிந்தவர்க் கிப்பய னென்றும்
 வண்மையி னிதுகா றும்பகுத் துரைத்தாம்
           வார்சடைக் கடவுள்பூ சனையால்
 நண்ணிய ஞானத் திரண்டையு மறுத்து
           நரகுமண் டுறக்கமூ விடத்தும்
 அண்முறா தைந்து மலங்களுந் துமிய
           வமர்சிவ யோகமற் றருள்வாம்.

(இ - ள்.) அறம் இத்தன்மைத் தென்றும் தீவினை இத்தன்மைத் தென்றும் இவற்றைச் செய்தோர்க் கெய்தும் பயன்கள் இவை இவை என்றும் வழங்குமுறைமையானே இதுகாறும் கூறுபடுத்திக் கூறினோம். நெடிய சடையினையுடைய இறைவன் வழிபாட்டினாலே வந்தெய்திய மெய்யறிவாகிய வாளினாலே நல்வினை தீவினைகளாகிய இரண்டு தளைகளையும் அறுத்து வீசி இவற்றால் எய்தும் நிரயமும் நிலவுலகும் துறக்கமும் என்னும் மூன்றிடங்களையும் அணுகாமலே இவற்றிற்குக் காரணமான ஆணவ முதலிய ஐந்து மலங்களும் அழியும்படி அமராநின்ற சிவயோக நிலையினை இனி அருளிச் செய்வாம் கேட்கக் கடவை.

(வி - ம்.) புண்ணியமிது என்றும் பாவமிது வென்றும் என ஒட்டுக. வண்மை - அறிவு வழங்கும் முறைமை.

(352)