பக்கம் எண் :

556தணிகைப் புராணம்

 மேவரு ஞான மிரண்டவற் றொன்று
           விமலனார் பாததா மரையே
 ஓவறு மன்பி னுணர்திரு வளிக்கு
           மொப்பிலா வுயர்கலை ஞானம்
 தாவரும் பவத்தை வேரொடுங் களையுந்
           தக்கமெய்ஞ் ஞானமொன் றிவற்றால்
 சாவதும் பிறப்புந் தணப்புறச் சிவத்தைச்
           சார்ந்தது வாய்நிற்றல் யோகம்.

(இ - ள்.) எய்துதற் கரிய ஞானம் இரண்டு வகைப்படும். அவற்றுள் ஒன்று இறைவனுடைய திருவடித்தாமரைகளையே ஒழிவில்லாத மெய்யன்போடு உணர்வதாகிய செல்வத்தைத் தருகின்ற ஒப்பில்லாத படி உயர்ந்த கலைகளாகிய சிவாகமங்களை ஓதியுணர்ந்த ஞானமாகும். மற்றொன்று குற்றம் வருதற்கிடமான பிறப்பினை வேரோடுங் களைந்து விடுந் தகுதியுடைய திருவருள் ஞானமாகும். இவ்விருவகைப்பட்ட ஞானங்களுள் யாதானுமொன்றால் இறப்பும் பிறப்பும் இல்லையாம்படி இறைவன் திருவருளைச் சார்ந்து தான் அத்திருவருளாகவே நிற்பது யோகம் எனப்படும்.

(வி - ம்.) விமலனார் - இறைவன். ஓவறும் - ஒழிதலில்லாத, கலையை ஓதியுணர்ந்த ஞானம் என்க. ஒன்று கலைஞானம் மற்றொன்று திருவருள் ஞானம். அஃதாவது "பண்டைநற்றவத்தாலே பிறப்போடே தோன்றிப் பரமனைப் பத்திப் பண்ணற் குரிய ஞானம்.

(353)

 இரண்டறப் பண்டே கலந்திடு மனாதி
           முத்தனா லிருண்மல மாயை
 திரண்டவன் கருமந் தீர்தர வவனைத்
           தெரிசித்துத் தன்னையுங் கண்டு
 முரண்டகு முலகிற் றுயின்றுல குறங்கு
           முழுத்தவப் பொருள்வயின் விழித்தோன்
 அரண்டக வாண்ட வமலனே ஞேய
           மாகிய வருஞ்சிவ யோகி.

(இ - ள்.) தான் என அவனென இரண்டு தன்மையும் அறத்தானே என்னும்படி பண்டே உயிரொடுங் கலந்துநின்ற அனாதிமுத்தனாகிய இறைவன் திருவருளானே ஆணவமும் மாயையும் திரண்ட வலிய கன்மமும் என்னும் இம்மூன்றும் கழிய மெய்ப்பொருளாகிய அவ்விறைவனைக் கண்டு மேலும் அவ்வாற்றானே உயிராகிய தன்னையுங் கண்டு மாறுபடுந் தகுதியுடைய நிலையுதலில்லாத உலகப் பொருள்களிடத்தே உறக்கத்தை மேற்கொண்டும் பெத்தநிலையினராகிய உலகோர் துயின்றிருத்தற் கிடமான முழுமுதலாகிய அம் மெய்ப்பொருளிடத்தே தனது அறிவுக்கண்ணை விழித்துப் பார்த்திருப்பவனே, பாதுகாவல்