பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்557

அமையும்படி ஆள்கின்ற அவ்விறைவனே தனக்குக் காட்சிப் பொருளாகப்பெற்ற சிவயோகி எனப்படுவான்.

(வி - ம்.) அனாதிமுத்தன் - கடவுள். இருண்மலம் - ஆணவமலம். கருமம் - இருவினை. உயிர்தான் இறைவனைக் காணுமாற்றானன்றித் தன்னைக் காணமாட்டாமை தோன்ற அவனைத் தரிசித்துத் தன்னையுங் கண்டு என்றார். உலகோர் ஒழுக்கத்தே தான் துயின்று உலகோர் துயிலும் ஞானவொழுக்கத்தாலாகிய மெய்க்காட்சியில் தான் விழித்து என்க.

(354)

 காட்சியே கருத லுரையள வையினாற்
           காணுறு மெவ்வகைப் பொருளும்
 மாட்சியி னையந் திரிபறத் தெரித்து
           மயங்குயிர்க் கறிவினை யாக்கும்
 ஆட்சியி னமைந்தோ னனாதியே முத்த
           னரும்பொருள் விளக்குமவ் வுரையும்
 மீட்சியில் கருணை யுடையவவ் வாத்தன்
           விதித்தருள் வேதமா கமமே.

(இ - ள்.) காட்சியளவை, கருதலளவை, உரையளவை என்னும் மூவகை அளவைகளானும் காணப்படுகின்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள் முதலிய பலவகைப் பொருள்களின் இயல்பையும் மாட்சிமை யுண்டாக ஐயமும் திரியும் இல்லாதபடி அறிவித்து இவற்றால் மயங்காநின்ற உயிரினங்கட்கு மெய்யுணர்வினை உண்டாக்குமொரு திருவருளாட்சிக்கண் எஞ்ஞான்றும் நிலைபெற்றுள்ள இறைவன் அனாதியே மலங்களாற் கட்டுண்ணாத முத்தன் ஆவான். இப்பொருளியல்பினை விளக்குங் கருவியாகிய அவ்வுரைத் தொகுதியே அவ்விறைவன் வகுத்தருளிய வேதமும் ஆகமங்களுமாம்.

(வி - ம்.) இறைவன் அநாதிமுத்தன் அவன் உரை வேதமும் ஆகமமுமாம் என்றவாறு. ஏனைய அளவைகளும் இம்மூன்றனுள் அடங்கும். எனவே, சிவபெருமானே முழுமுதற்கடவுள், வேதாகமங்களே மெய்ந்நூல்கள் ஏனைய கடவுளர் உயிரினங்களே ஏனையநூல் பசு நூல்களே என்றவாறாயிற்று.

(355)

 பரமதக் கடலுட் டுளைகுநர் தாமும் பைப்பய வுயர்ந்துமே லில்லா
 வரமலி சைவ மருவுவ ரிதன்கண் மரபினா லறமுத லாற்றி
 விரவுவ ரிறைவன் பாததா மரையை மேவருஞ் சைவமே சார்ந்தும்
 உரமறு புறநூ லொழுகுந ரமிழ்த மொரீஇவிடம் பருகுநர் புரைவார்.

(இ - ள்.) இனிப் புறச்சமயங்களாகிய கடல்களிலே வீழ்ந்து தத்தளிப்பவர் தாமும் ஒருகாலத்து உண்மையுணர்ந்து மெல்லமெல்ல ஒப்புயர்வில்லாததும் பேறுகள் மிகுதற்கிடமானதுமாகிய இச் சைவ சமயத்தே புகுவர். புக்கவழி இச் சமயங்காட்டும் அறவொழுக்கங்களை