பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்559

(இ - ள்.) உயிரோடு கலந்த மாயைதரும் உடலினைக் கடந்து திகழுகின்ற இறவாத அருட்டிருமேனியுடையவன் பரமசிவன் ஒருவனே. மாயைதரும் உருவத்தையுடைய பிரமன் முதலிய தேவர்களும் உயிரினமே என்று கூறப்படுவர்; இறைவர் ஆகார். இவர் முதலிய உயிரினங்கட்குப் புரத்தற்றன்மையுடைய மாயையுடல் பொருந்தாதொழியின் மெய்யறிவும் பொருந்துதலின்றாம். வரந்தருமாண்புடைய பரமசிவனாலே பிரமதேவனும் திருமாலுமாகிய இருபெருந்தேவரும் விளங்குகின்ற படைப்பு முதலிய முத்தொழிலின்கட்பட் டடங்காநிற்பர்.

(வி - ம்.) மாயாவுரு - இறவாத அருட்டிருமேனி. பிரமனையும் திருமாலையும் பரமசிவனே படைத்துக் காத்து அழிப்பன் என்றவாறு.

(358)

 அனாதியே யமலன் சச்சிதா னந்த
           னரன்பதி யனாதியே மலத்தில்
 தனாதியன் மறைய விரவிய தான்மாச்
           சாற்றிய மலத்தொடு மாயை
 மனாதிநின் றுயிர்க்குங் கருமமு மனாதி
           மாயையுங் கருமமு மானால்
 பினாதியிற் பந்தம் பந்தமோ ரிரண்டும்
           பேர்க்குவன் பதியெனப் படுவான்.

(இ - ள்.) பரமசிவன் அனாதியாகவே மலமற்றவன்; உண்மை அறிவு இன்பம் என்னும் முப்பண்புகளையும் இயல்பாகவே யுடையன்; அவனே இறைவன் ஆவன். இனி, உயிர் அனாதியாகவே ஆணவ மலத்தோடு தனது உண்மை அறிவு இன்பம் என்னும் மூன்றியல்பும் மறையும்படி கலந்துளது. இனி ஈண்டுக் கூறப்பட்ட சகசமலத்தோடு மாயையும் மனமுதலியவற்றைப்பற்றி உயிர்க்கும் கருமமாகிய மலங்களும் அனாதியேயாம். அங்ஙனமாயினும் மாயையும் கருமமும் படைப்புக் காலத்தே கூட்டப்பட்ட ஆதியையுடைய கட்டுகளாம். எனவே இத்தொடக்கமுடைய கட்டும் தொடக்கமேயில்லாத ஆணவமலக்கட்டும் ஆகிய இருவேறுவகைக் கட்டுகளையும் உயிரினின்றும் விடுவிப்பவன் ஆகிய அப்பர மசிவனே இறைவன் என்று கூறப்படுவான்.

(வி - ம்.) ஆனால் - ஆனாலும் எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. அங்ஙனமாயினும் என்க. ஆதியிற் பந்தம் என்றது படைப்புத் தொடக்கத்தே பந்தமாகிய என்றவாறு. இதனால் ஆணவமலத்தைச் சகசமலம் என்றும் ஏனையிரண்டனையும் ஆகந்துக மலம் என்றும் கூறுப.

(359)

 செம்புதன் களிம்பு பற்றறி யாது
           களிம்புதான் றீர்வது மில்லை
 பைம்பொனாக் குவதோர் மருந்துமம் மருந்தின்
           பாங்கறி புலவனு முளரால்