பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்561

 சடமுடல் கரண மாவி சார்ந்தலா லியங்கா வற்றே
 மடனுயிர் தானும் வள்ள றனையன்றி றியக்க மின்றே.

(இ - ள்.) இனி உடலே உயிரென்பாரும், மன முதலிய உட்கருவிகளை உயிரென்பாரும், கண் முதலிய புறக்கருவிகளை உயிரென்பாரும் உளர். இவரெல்லாம் அவ்வுடலும் உட்கருவியும் புறக்கருவியுமாகிய இவற்றையெல்லாம் தனக்குடைமையாகப் பெற்ற பொருளே உயிர் என்பதனை உணராதவரே யாவர். உடலும் கருவிகளும் உயிரில் பொருள்; இவை உயிர் தம்மைப் பொருந்துழி இயங்குவனவன்றித் தாமே இயங்குவன வல்ல. இங்ஙனமே இவையிற்றை இயக்கும் அவ்வுயிர்தானும் தானே அறியும் இயல்புடைத்தன்று இறைவன் அறிவிக்க அறியுமியல்புடைத்தாம்.

          (வி - ம்.) உடலினை உயிரென்போர், உலோகாயதர். இவருள் ஒருசாரார் கரணங்களை உயிரென்பர்; பொறியை யுயிரென்போர் புத்தர். ஈற்றில் நின்ற இயக்கம் அறிவியக்கம். தானே அறியும் தன்மையில்லாமல் மடம்பட்ட உயிர் என்க.

(362)

 தெருளுயி ரணுவே யென்பர் தேகத்தி னொருபா லென்பர்
 உருவினின் முழுது மென்ப ரோங்குபூ ரணமே யென்பர்
 பெருமுழை யுடன்முற் றோர்ந்து பின்னத்திற் பின்ன மின்றிப்
 பொருடொறும் பற்றி நீங்குந் தன்மையிற் புலன்கொளாதார்.

(இ - ள்.) இனி ஒருசாரார் உயிரின் உருவம் அணு என்பார் இவர், உடல் பல துளையுடையதாதலைக் கருதிற்றிலர். ஒருசாரார் உயிர் உடலில் ஓரிடத்தே இருக்குமென்பர்; இவர் உடல் முழுதும் உணருமியல்புடைத்தாதலை ஓர்ந்திலர். வேறுசிலர் உயிர் உடல் முழுதும் வியாபித்திருக்கும் என்பர், இவர் உடலின்கண் உறுப்புத் துண்டிக்கப்பட்டவிடத்து உயிர் துண்டுபடாமையை நோக்கிற்றிலர். வேறுசிலர் உயிர் யாண்டும் வியாபகமாயிருக்கும் என்பர். இவர் உயிர் தான் பற்றினதே பற்றா யழுந்திப் பின் வேறு பொருளிற் சென்றழுந்துதலை உணர்ந்திலர்.

(வி - ம்.) அணு முதலியவற்றிற்கு முழை முதலியவற்றை நிரனிரலாகக் கொள்க. அணுவென்போர் நையாயிகரும் பாஞ்சராத்திரியரும்; ஒருபால் என்போர் கருமயோகியர். உருமுழுதுமென்போர் அருகர். பூரணமென்போர் மாயாவாதியர். இச்செய்யுளில் அவர் அவர் கொள்கைகட்கும் பொருந்தாமை மிக நுணுக்கமாகக் கூறப்பட்டமை உணர்க.

(363)

 நிறைசிவத் தடக்கஞ் சத்தி நிருமலிக் கடக்க மான்மா
 மறைமல மவற்ற டக்க மன்னிய வவற்றின் சத்தி
 அறையுயிர்ச் சத்தி தன்பா லடக்கமே மாயை மாயை
 பொறையுயிர் காரி யங்க ளதனிடை யடக்கம் பூணும்.

(இ - ள்.) யாண்டும் நிறைந்துள்ள இறைவன்பால் இறைவியாகிய சத்தி அடங்கும். மலமற்ற அச்சத்தியின்பால் உயிர்கள் அடங்குவனவாம்.