பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்567

(வி - ம்.) ஆதனம் எட்டு; அறுபத்துநான்குமாம். தமக்குப் பொருந்தியதொரு ஆதனத்திருந்தென்க. விது - திங்கள். விமலம் கதுவுமாரியன் என்றது தக்கிணாமூர்த்தியை. உபயோகம் - இட்ட சித்தியை முடித்தற்குரிய துணைச் செயல்கள் என்க.

(378)

 குறங்கி னிற்கரந் திரியக்காய்க் குலாவமுன் மார்பம்.
 பிறங்க மேற்கள நிமிரநா சியின்விழி பிணைய
 உறந்த பன்னிரை நடுவணா வோட்டற நிற்பச்
 சிறந்தி ரேசக பூரக மறச்சிலை யொத்து.

(இ - ள்.) கைகளைத் தொடையின்மேற் குறுக்காகப் பொருந்த வைத்து மார்பை முன்னே தள்ளிக் கழுத்தினை நிமிர்த்தி, மூக்கின் நுனியில் இரண்டு பார்வைகளையும் நிறுத்தி, மிகுந்த இரு பல்வரிசைகளினிடையே நா நுனியை அசைவற நிறுத்தி இவ்வாற்றானே சிறப்புற்றுப் பின் மூச்சினை விடுதலும் வாங்குதலுமின்றிக் கல்லைப் போன்றிருந்து.

(வி - ம்.) குறங்கு - தொடை. திரியக்கு - குறுக்கு. மார்பம் முன்னே பிறங்க என்றது, முன்தள்ளி என்றவாறு. உறந்த- மிக்க. உறு என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம் என்க. இரேசகம் மூச்சுவிடுதல். பூரகம் - மூச்சிழுத்தல். சிலை - உருவச்சிலையுமாம்.

(379)

 மன்னு நாயக னுருவினை மனநிலை யடங்க
 முன்ன ரார்தர நினைந்துபின் முயங்குரு வறுதி
 நன்ன ராரிய னவில்வழிப் பெற்றதி னலப்பார்
 அன்ன வாய்மைநீங் குறினுரு மடுத்துமீட் டடுப்பார்.

(இ - ள்.) மனமடங்கி நிலைத்தற் பொருட்டுத் தொடக்கத்தே நிலைபெற்ற இறைவனுடைய திருவுருவத்தைத் தேனித்துப் பின்னர், ஆசாரியன் கற்பித்தபடி நிட்களமான அருவநிலையிலே அந்நினைப்புமறப் பொருந்தா நிற்பர். இவ்வுண்மைநிலை இடையே கலைந்தவிடத்தே மீண்டும் தேனித்து மீண்டும் அவ்வுண்மைநிலையிற் பொருந்தாநிற்பர்.

(வி - ம்.) நாயகன் உரு - இறைவன் திருவுரு, திருமந்திரமுமாம். உருவறுதி - நிட்களம். அதின் - அவ்வருவத்திலே. தேனித்து - தியானஞ் செய்து.

(380)

 இதய நாண்மல ரிடத்தினிற் பெருவிர லளவில்
 வதியு நாதனை யோகினில் வழிபடு வார்க்குப்
 புதிய போகமெ லாமுறும் புகரொன்று மடாது
 கதிய யோகத்தி னங்கமு மாறவை காண்டி.

(இ - ள்.) இதயமாகிய புதிய தாமரை மலரிடத்திலே பெருவிரல் அளவில் உறைகின்ற இறைவனை இவ்வியோக முறையாலே வழிபடும் அடியவர்களுக்குப் புதுமையுடைய நுகர்ச்சிகள் எல்லாம் வந்துபொருந்தும். தீமையொன்றும் வரமாட்டாது. பற்றியுள்ள இந்த யோகத்தின் உறுப்புக்களும் ஆறு ஆகும். அவற்றையும் கூறுதும் உணர்க.