பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்569

செய்யாநிற்பர். அறிவை மூடு மியல்புடைய பசிப்பிணியையும் நீர் வேட்கையையும் அமிழ்தத்தைத் தியானஞ் செய்தல் வாயிலாய்த் தணித்துக்
கொள்ளுவர்.

(வி - ம்.) இது - இப்பிராணாயாமம். தீர்பாக்கு - பாக்கு : வினையெச்ச விகுதி. கனற் பிணி - பித்தநோய். அறலின் முதிர்பிணி - சிலேத்துமநோய். தியானித்தல் - பாவித்தல்.

(383)

 முள்ளெயிற் றரவ மாதிய விடங்கண்
           முகப்பினு முடலெலா மமிழத
 வெள்ளமிக் கொழுக்கி நனைத்திடின் விளியும்
           விடைப்புறு வளியினை வென்றோர்க்
 குள்ளமுந் தூய்தாய்ப் பொறிகளு மடங்கு
           முருவினிற் பிணியின்மை யாதி
 நள்ளுறும் பவ்வீ முதலிய முன்போ
           னண்ணுறா நொய்தெனக் கழியும்.

(இ - ள்.) முட்போன்று கூர்த்த பல்லையுடைய பாம்பு முதலிய நச்சுயிர்களின் நஞ்சினை உடல் ஏற்றுக்கொள்ள நேர்ந்த விடத்து உடலெங்கும் அமிழ்தம் வெள்ளமாகிப் பெருகி மயிர்த்தொளைதோறும் ஒழுகுவதாகத் தியானஞ் செய்யின் அந்நஞ்சு கெட்டொழியும். முனைப்புறா நின்ற உயிர்ப்புக் காற்றினை அடக்கி ஆள்பவர்க்கு நெஞ்சமும் தூயதாகி, அதன் கருவிகளாகிய மெய் முதலிய ஐம்பொறிகளும் அடங்கும். உடலின் நோயின்மை முதலிய நலங்களும் தோன்றும். மலம் நீர் முதலிய துரால்கள் பண்டுபோலாது நொய்யவாகக் கழியாநிற்கும்.

(வி - ம்.) நினைத்தல், ஈண்டுப் பாவனையாலே என்க. வளி - உயிர்க் காற்று. நொய்து - ஒருமை பன்மை மயக்கம்.

(384)

 மலர்க்கரத் தீரெண் முறைமுழந் தாளை
           வலம்புரிந் திடுவதொன் றாக
 நலத்தகு நாற்பத் தெட்டுமாத் திரைக
           ணயப்புறு முதலறு நான்கென்
 றிலக்கமுற் றிடுத லிடைகடை யீரா
           றெய்துத லின்னவல் லுநர்க்குத்
 துலக்குறு நெஞ்சத் தவர்க்குமாத் திரைகள்
           சொல்லுறிற் கைநொடி யளவே.

(இ - ள்.) மலர்போன்ற கையாலே பதினாறுமுறை முழங்காலை வலம்படச் சுற்றுதற்குற்ற காலம் ஒரு மாத்திரையாகக் கொண்டு, இம் மாத்திரையளவின் நாற்பத்தெட்டு மாத்திரைப் பொழுது செய்வது விரும்பப்படும் தலையாய பிராணாயாமமாம். இருபத்துநான்கு மாத்திரை யியற்றுதல் இடையாய பிராணாயாமமாம். பன்னிரு மாத்திரை யியற்றுதல்