பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்587

 தீதிலிபூ சனைசாந்தி ராயணமுஞ் செய்து
           தீர்வினடி யடைந்துபொருண் முழுதுமளித் திரந்து
 காதலினன் னவர்கருணைக் கிலக்கமுற லறிவிற்
           கலந்தவரைப் பிழைத்திடினு மிம்முறைகைப் பிடித்தல்.

(இ - ள்.) போதகன் சோதகன் முத்திதன் என்னும் முத்திறத்து ஆசிரியர்களை கடுஞ்சொற் கூறின் நிரலே நூறாயிரமுறையும், ஐம்பதினாயிரமுறையும், இருபத்தையாயிர முறையும் அகோரமந்திரத்தைக் கணித்து அவ்வாசிரியர் அடிகளிலே வணங்கிப் பொறைசெய்யுமாறு இரத்தலும் வேண்டும். அவர்மேற் கையாற் புடைப்பின் அறுநூறாயிரமுறை கணித்தல் வேண்டும். படைக்கலங்களாற் புண்படுத்தியக்கால் பன்னிரு நூறாயிரமுறை கணித்திடுக. மேலும் இறைவன் வழிபாடும் சாந்திராயண விரதமுமியற்றி முடித்துப் பின்னர் அவ்வாசிரியரை அடைந்து தம் பொருள்முழுதும் அவர்க்கு வழங்கி இரந்துநின்று அன்போடு அவரருட்கு இலக்கமாகுக. பேரறிவினுட் கலந்த சீவன் முத்தர்க்கு இவ்வகைப் பிழைபுரியினும் இக்கழுவாய்களையே செய்க.

(வி - ம்.) போதகன் - மெய்ந்நூலை ஓதுவிக்கும் ஆசிரியன். சோதகன் - மெய்ப்பொருளை யுணர்த்துமாசிரியன். முத்திதன் - நிருவாண தீக்கையளிக்கு மாசிரியன். அறிவிற் கலந்தவர் - சீவன்முத்தர்.

(415)

 பாறயிர்நெய் பழம்விரைநீ ராட்டிநறுங் குவளை
           பலவணிந்து சுவையாறும் பழுத்தநா லுண்டி
 கூறிமனுக் கொடுத்தானெய் விளக்கிட்டா குதிதீக்
           கூர்த்திரண்டா யிரஞ்செபம்பத் திற்கொன்றா குதியும்
 வீறுபெறப் புரிந்துநிசி யுண்டுநிலத் துறங்கி
           விளம்பிவா யிணைவிழைச்சு விடுத்துடனெய் பூசா
 தேறுயர்த்தாற் காட்டியா னைந்துநித்தம் பருகி
           னிறுங்குரவற் பிழைத்தபிழை யடியரரு ளினும்போம்.

(இ - ள்.) நல்லாசிரியர் திறத்துச் செய்த தீவினை, பால் தயிர் நெய் பழம் நறுமணப்பொருள் நன்னீர் என்னும் இவற்றால் மஞ்சனமாட்டிப் பற்பல குவளை விளக்குகளிட்டு அறுசுவையும் முதிர்ந்த நால்வகை உண்டியும் மந்திரமோதி ஆனெய் விளக்கிட்டு வேள்வியின்கண் ஆகுதி கொடுத்து இரண்டாயிரமுறை கணித்தற் கொருமுறையாகுதியும் சிறப்புறக் கொடுத்து இரவின்மட்டும் உண்டு வறுநிலத்திலே படுத்துறங்கி மெய்யே பேசி இணைவிழைச்சினை ஒழித்து உடலிலே எண்ணெயிடாமல் ஏற்றுக் கொடியுடைய எம்பெருமானுக்கு நாடோறும் ஆனைந்தான் திருமுழுக்காட்டி அவ்வானைந்தைப் பருகிவரிற் போகும் ஒரோவழி. மெய்யடியார் திருவருள் புரிந்தவிடத்தும் போகும்.

(வி - ம்.) குரவற் பிழைத்த பிழை ஆட்டி அணிந்து கொடுத்துப் புரிந்து உண்டு உறங்கி விளம்பி விடுத்துப் பூசாது ஆட்டிப் பருகின் இறும்; அடியர் அருளினும் போம் என்றுமுடிக்க. வாய்விளம்பி என மாறுக. வாய் - வாய்மை.

(416)