| | மனமிழைத்த வொருகுற்ற மறுமோன முற்று | | | வழங்குபொறி தடுத்தமலன் மலரடியர்ச் சிப்பின் | | | கனல்படுபஞ் சாம்வாக்கி னொருகுற்ற முணவு | | | கடுகமுந்நா ளொழிந்துசந்தி தொறுந்தெண்ணீர் பருகி | | | அனகனுரு நினைப்பினுடற் குற்றமொன்று விளியு | | | மஞ்செழுத்தா யிரந்தும்ம லாதியெழிற் பயிற்றல். |
(இ - ள்.) நீரினுள் முழுகியிருந்து உயிர்க்காற்றினைத் தடுத்தடக்கி இறைவனைத் தேனித்துக் கூறப்படும் சிவகாயத்திரி மந்திரத்தை நூற்றெட்டுமுறை நெஞ்சினுள்ளே கணித்தால் நெஞ்சத்தாலே செய்ததொரு தீவினை கெடும். இனி, புலன்களிலே சென்று வீழாநின்ற ஐம்பொறிகளையும் அடக்கி மௌனியாயிருந்து இறைவன் திருவடிமலரை வழிபட்டால் சொல்லா லியற்றியதொரு தீவினை தீயிற்பட்ட பஞ்செனக் கெட்டொழியும், மூன்றுநாள் உணவினைக் கடிதாகத் துறந்து சந்திக் காலந்தொறும் தண்ணீர்மட்டும் பருகி இறைவனுடைய திருவுருவத்தைப் பாவனைசெய்தால் உடலானிகழ்ந்ததொரு தீவினை கெடும். தும்மல் முதலியன தோன்றின் திருவைந்தெழுத்தை ஆயிரமுறை கணித்திடுக. (வி - ம்.) புனல் - நீர். வளி - பிராணன். (433) | | வடாதுகுணக் கினைநோக்கு முச்சிமுகம் பளிங்கு | | | வரைபெயரீ சானங்கிழக் கெதிர்முகங்கோங் கலரே | | | தடாதபெயர் தற்புருடம் வலத்தோண்மேற் றென்பா | | | றனைநோக்கு மயிர்சூழ்ந்த முகங்கரிய தகோரம் | | | விடாதிடத்தோண் மிசையுதக்குத் திசைநோக்குந் தெரிவை | | | மிளிர்முகஞ்செம் மணிநிறஞ்சொற் பெயர்வாம மெருத்தில் | | | குடாதெதிர்ந்த முகம்வெண்மை சத்தியோ சாதங் | | | கொண்டுரைக்கும் பெயரிந்த வைந்துமுகத் தோடும். |
(இ - ள்.) உச்சியிலுள்ள முகம் வடகிழக்கை நோக்கியிருக்கும். அதன் நிறம் படிகமலையின் நிறம். அதன் பெயர் ஈசானம். இனிக்கிழக்குத் திசை நோக்கியிருக்குமுகம் கோங்கமலர் போன்ற நிறமுடையது; அதன் பெயர் தற்புருடம் எனப்படும். இனி வலத்தோள் மேற்பொருந்திய முகம் தென்றிசையை நோக்கியிருக்கும். தாடி மயிர் சூழப்பட்ட இம்முகம் கருநிறமுடைத்து; இதன் பெயர் அகோரம் என்க. இடத்தோண் மிசை இடையறாது வடதிசையை நோக்கியிருக்குமுகம், உமையன்னையின் முகம்போன்றிருக்கும். அதனிறம் செம்மணி நிறம்; சொல்லப்படும் அதன்பெயர் வாமம் என்ப. பிடரின்கண் மேற்றிசையை நோக்கியிருக்குமுகம் வெண்ணிறமுடைத்து; இதற்கு அறிஞர் கொண்டு கூறும் பெயர் சத்தியோசாதம் என்பதாம். இந்த ஐந்து திருமுகங்களோடும். |