பக்கம் எண் :

602தணிகைப் புராணம்

வந்து பால் முதலியன வழங்கும் என்று அருளிச்செய்த அவ்வாக்களின் கூட்டம் வாழாநின்ற எல்லையையும், அவற்றின் மரபும் அடியேன் தெரிந்து கொள்ளும்படி திருவாய் மலர்ந்தருள்க!" என்று வேண்ட அதுகேட்ட அவ்வறுமுகப் பெருமானும், அவ்வானின் மாண்பு தோன்றும்படி பேரண்டத்தின்கண் அமைந்த உலகவியல்பெல்லாம் கூறுசெய்து கேட்போர் தீவினை கெட்டோடும்படி திருவாய் மலர்ந்தருளத் தொடங்கினன்.

(வி - ம்.) இது - மெய்ஞ்ஞானம். படைஞன் - முருகன். விழுமியது - நல்வினை. பாலாதி - ஆனைந்தும். மரபு - ஆன்போற்று மரபு. வினை விழுந்து ஓடக் கழுவாய் மொழிந்தாம் என விற்பூட்டுப் பொருள் கோளாக்கினுமாம்.

(441)

வேறு

 இன்னுழை கதிரி னணுவிரு நான்கெட் டிணங்குறல் கசாக்கிர கந்தான்
 மன்னுத லிருநான் கிலீக்கையெட் டஃது மருவுதல் யூகையெட் டஃது
 துன்னுத லியவை யஃதிரு நான்கு துறுமுத லங்குல மறுநான்
 கன்னது சேரின் முழமது நான்கு தனுவத னிரட்டியோர் தண்டே.

(இ - ள்.) பலகணி வழியாய் வீட்டினுள் நுழையும் வெயிலின்கண் பறக்கும் அணு பதினாறு கொண்டது ஒரு கசாக்கிரகம். அக்கசாக்கிரகம் எட்டுக்கொண்டது ஓர் இலீக்கை. இலீக்கை எட்டுக்கொண்டது ஒரு யூகை. யூகை எட்டுக்கொண்டது, ஓர் இயவை, அஃது எட்டுக்கொண்டது ஓர் அங்குலம். இருபத்துநான்கங்குலம் கொண்டது ஒரு முழம். நான்குமுழம் ஒரு வில். இரண்டு வில் ஒரு தண்டு.

(442)

 இராயிரந் தண்டங் குரோசமே குரோச
           மிரட்டிசேர்ந் ததுகெவி யூதி
 குரோசநான் குறல்யோ சனையது நூறு
           கோடிமண் ணண்டத்தி னளவை
 தராதல முதலாந் தத்துவக் கண்டந்
           தனித்தனி யாயிர கோடி
 விராவுமண் முதலா வொன்றனுக் கொன்று
           விளம்பிய வளவைமிக் குறுமால்.

(இ - ள்.) இரண்டாயிரந் தண்டங்கொண்டது ஒரு குரோசம். இரண்டு குரோசங் கொண்டது ஒரு கெவியூதி. நான்கு குரோசங் கொண்டது ஒருயோசனை. மண்ணண்டத்தின் அளவு நூறுகோடி யோசனையாம். தராதல முதலிய அம்மண்ணண்டத்திற்குத் தத்துவக் கண்டங்கள் தனித்தனியே ஆயிரகோடி யுள. மண்முதலாக அமைந்த அக்கண்டங்கள் ஒன்றனுக்கொன்று அளவையானும் மிகும்.

(443)

 பகுதிய னளவும் பதின்மடங் கென்றும் பகுதியிற் சதமடங் கராகம்
 நிகழரா கத்தின் வித்தைவித் தையினு நியதியந் நியதியிற் காலம்
 தொகுநியு தத்தோ டயுதங்கா லத்திற் சூழ்தருங் கலைகலை தன்னில்
 தகுமொரு கோடி மாயைமேல் வித்தை தானதிற் கோடிமே லயுதம்.