| (இ - ள்.) இந்தப் பாதாளலோக மேழினுக்கு மேலுள்ள இடைவெளி பத்து நூறாயிரயோசனை யுயரமாம். முற்றுணர்வுடைய பதினாயிரம் ஆடகேசர் உறைகின்ற புவனம் ஒன்பது நூறாயிர யோசனையாம். ஆடகேசர் உறையும் பொற்கோயிலுயரம் ஆயிரயோசனை என்ப. அக்கோயிலைக் குருதி யொழுகுதற்குக் காரணமான வாளேந்திய அரக்கரும் தயித்தியருஞ் சூழ்ந்திருப்பர். இப்புவனத்திற்குமேல் உள்ள இம்மண்ணுலகத்தின் கனம் கோடியோசனை என்ப. ஏழு பாதாளலோகங்களுக்கும் அவற்றின் வழிகட்கும் ஆதாரமாயிருப்பவர் இவ்வாடகேசுரரே. இனி இப்பிலவழிகள் நரகலோகத் தெல்லைவரையிற் செல்லும். (453) | | மண்ணடி யுரைத்தா மேருவோ ரிலக்க | | | மண்ணுளெண் ணாயிரத் திரட்டி | | | நண்ணிய தேனை யளவுமேற் றோற்று | | | நளினமென் பொகுட்டுற ழதன்றன் | | | திண்ணிய பராரை யீரெண்ணா யிரஞ்சென் | | | னியின்விரி விரட்டிமே கலைமூன் | | | றண்ணுறு மேக்கு மேகலைப் பரப்பி | | | னவிர்சிக ரம்பல வுளவே. |
(இ - ள்.) நிலத்தின் கனம் முன்னே கூறினேம். இனி இம்மண்ணுலகின் நடுவே மேருமலை நூறாயிரம் யோசனை யுயரமுடையதாயிருக்கும். மண்ணுக்குள் பதினாறாயிரயோசனை ஆழ்ந்திருக்கும். எஞ்சிய எண்பத்து நான்காயிரயோசனை மண்ணுக்கு மேலே காணப்படும். தாமரைப் பொகுட்டையொத்த அம்மேருவின் பராரை பதினாறாயிர யோசனை விரிந்திருக்கும். அதன் உச்சியின் விரிவு முப்பத்தீராயிரம் யோசனையாம். இம்மலையின்கண் மூன்று மேகலைகள் பொருந்தியிருக்கும். இம்மேகலையின் மேலுள்ள மேகலையின்கண் விளங்குகின்ற சிகரங்கள் பற்பலவுள. (வி - ம்.) நளினம் - தாமரை. பராரை - பருத்த அடிப்பகுதி. பரு + அரை - பராரை எனப் புணர்ந்தவாறு. (454) | | மாதிரத் தலைவர் தத்தம திசையின் மருவிய குவட்டிடை வதிவர் | | | ஓதிய சிரத்தி னாப்பணுங் குடாது முதீசியின் குணக்குமுச் சிகரம் | | | மேதக விளங்கு மயனரி யீசன் விளம்பிய முறையின்வீற் றிருப்பார் | | | ஏதமி லவற்றின் பெயர்மனோ வதிவை குண்டமே சோதிவெற் பென்ப. |
(இ - ள்.) இந்தச் சிகரங்களிலே திக்குப்பாலகர் தத்தம் திசையிலுள்ள சிகரத்திலே உறைவர். கூறப்பட்ட அம்மலையுச்சியின் நடுவிடத்தும் மேற்குத் திசையினும் வடகிழக்கினும் மூன்று சிகரங்கள் மேம்பட்ட தகுதியுடையனவாய்த் திகழாநிற்கும். இவற்றின்கண் பிரமதேவனும், திருமாலும், சிவபெருமானும் வீற்றிருப்பர். இவற்றின் பெயர் நிரலே மனோவதி, வைகுண்டம், சோதிமலை என்பனவாம் என்று கூறுவர். |