பக்கம் எண் :

608தணிகைப் புராணம்

(வி - ம்.) அயன் அரி ஈசன் என்று விளம்பிய முறையின் அவற்றின் பெயர் என்க.

(455)

 மந்தரங் கந்த மாதனம் விபுலம்
           வயங்குபா ருசுவமென் றியம்பும்
 இந்தநான் மலையுங் கீழ்த்திசை முதனாற்
           றிசையினு மெறுழ்படக் கிடக்கு
 பைந்துணர்க் கடம்பு சம்புதண் போதி
           பரந்தவா னான்கினு நிற்கும்
 முந்துநாற் றிசையு மருணமா னதந்தண்
           ணசிதோத மாமடு முயங்கும்.

(இ - ள்.) மகாமேருவின் கிழக்கு முதலிய நான்குதிசையினும் அதற்கு வலிமையுண்டாகும் பொருட்டு மந்தரமலை, கந்தமாதனமலை, விபுலமலை, விளங்காநின்ற பாருசுவமலை என்று கூறப்படும் இந்த நான்கு மலைகளும் கிடக்கும். அம்மலையினுச்சியின்கண் பசிய பூங்கொத்துக்களையுடைய கடம்பும், நாவலும், குளிர்ந்த அரசும், பரவிய ஆலும் என்னும் நான்கும் நாற்றிசையினும் நிற்கும். முந்திய கிழக்கு முதலிய அந்நாற்றிசையினும் அருணம், மானதம், குளிர்ந்த சீதோதம், மகாமடு என்னும் நான்கு நீர்நிலைகளும் பொருந்தியிருக்கும்.

(வி - ம்.) எறுழ் - வலிமை. நிலத்திற்கு வலிமையுண்டாக எனினுமாம். அசிதோதம் - சீதோதம்.

(456)

 நாற்றிசை மருங்கி னடிவரைச் சயித்தி
           ரதப்பொழி னந்தன வனந்தண்
 டேற்றுளி துளிக்கும் வைப்பிர சந்தண்
           செறிதிரு தாக்கியம் பொதுளும்
 தோற்றிய நாவற் கனியுணிற் பதின்மூ
           வாயிர மாண்டுதுன் னுவர்கள்
 ஊற்றுமக் கனிநீர் மேருவைச் சூழு
           மோங்குசாம் பூநதப் பெயரின்.

(இ - ள்.) இம் மேருமலையின் நான்கு திசையினும் அடிவாரத்திலே நிரலே சயித்திரதப் பொழிலும், நந்தனவனமும், குளிர்ந்த தேன் துளிக்கும் வைப்பிரசமும், குளிர்ந்து அடர்ந்த திருதாக்கியமும் என்னும் நான்கு நந்தனவனம் செறிந்திருக்கும். அம்மலைக்கண் தென்றிசையில் நிற்கும் நாவன் மரத்திலேயுண்டான கனியை உண்டோர் பதின் மூவாயிரம் ஆண்டு உயிர்வாழ்வர் என்ப. அக்கனியினின்றும் ஊறிய நீர் அம்மேருவைச் சூழ்ந்து உயர்ந்த 'சாம்பூநதம்' என்னும் பெயருடைய ஆறாகப் பாயாநிற்கும்.

(வி - ம்.) நந்தனவனம் என்றதற்கு விசித்திரை என்று பெயர் கூறுதலுமுண்டு.

(457)