பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்609

 பொற்றவந் நாவற் சிறப்பினா லுவர்நீர் போர்த்தமண் ணாவலந் தீவென்
 றுற்றது மேருத் தெனாதுயர் நிசத மேமகூ டம்பனி யோங்கல்
 செற்றெழில் வடாது நீலமே சுவேதஞ் சிருங்கமேல் கீழ்கட னிமிரும்
 மற்றைமேல் கீழ்பால் விலங்குவ கத்த மாதன மாலிய வானும்.

(இ - ள்.) பொன்மயமான அந்த நாவல் மரத்தின் சிறப்புப்பற்றி உப்பு நீர்க்கடல் சூழ்ந்த இந்நிலப்பகுதி 'நாவலந் தீவு' என்று பெயர் பெற்றது. இம்மகா மேருவிற்குத் தென்றிசையிலே உயரிய நிடதமலையும், ஏமகூடமலையும், இமயமலையும், நெருங்கி நிற்கும் வடதிசையிலே அழகிய நீலமலையும், சுவேதமலையும், சிருங்கமலையும், மேல் கடல் கீழ் கடல் இரண்டையும் பொருந்துவனவாய்க் கிடக்கும் மேற்குத் திசையினும் கிழக்குத் திசையினும் கந்தமாதனமலையும், மாலியவான்மலையும் நிரலே அதனை மறித்துக் கிடக்கும்.

(வி - ம்.) பொற்ற - பொன்மயமான. தெனாது - தெற்கின்கண், பனியோங்கல் - இமயமலை. செற்று - நெருங்க என்க. விலங்குவ - குறுக்கிடுவன.

(458)

 நடுவண்மே ருவுக்கு நாலிரு வரைக்கு நாற்றிசைக் கடற்குநள் ளினையே
 இடமுடை நவகண் டப்புவி யென்ப ரிவற்றது தன்மையுங் கேட்டி
 வடவரை சூழு நிலமிளா விரதம் வடாதிர மியமிர ணியநீர்க்
 கடல்வளை குருவே பத்திரங் குணாது கண்ணகன் கேதுமால் குடாது.

(இ - ள்.) நடுவணுள்ள மேருமலைக்கும் ஈண்டுக் கூறப்பட்ட எட்டு மலைகட்கும் நாற்றிசையிலும் உள்ள கடற்கும் இடையிடையே உள்ள நிலப்பகுதிகளையே ஒன்பது கண்டங்கள் என்று கூறாநிற்பர். இக்கண்டங்களின் இயல்பையும் இனிக் கூறுவேம் கேட்பாயாக! மேருமலையைச் சூழ்ந்துள்ள நிலம் இளாவிரத கண்டமாம். வடதிசைக்கண் இரமியகண்டம் இரணியகண்டம் என்பனவுள. கடனீரால் வளைக்கப்பட்ட குருகண்டம் பத்திராசுவகண்டம் என்பன கிழக்கில் உள்ளன. இடமகன்ற கேதுமாலகண்டம் மேற்றிசையில் உளது.

(வி - ம்.) நிலவண்டத்தின் நடுவேயுள்ள மேரு என்க. நள் - நடுவிடம். கேதுமால் - கேதுமாலகண்டம்.

(459)

 தெனாதரி வருடங் கிம்புரு டம்பா
           ரதமெனச் செப்பிடப் படுமால்
 மனாதியைக் கவர்க்கு மிளாவிர தத்தோர்
           மாணுருப் பொன்மையூ ணாயுள்
 முனாதுரைத் தனவே பத்திரத் தவரூண்
           முழுநெறிக் குவளைமெய் திங்கள்
 தனாதெழில் கவர்ந்தாங் கனையரா யுகந்தான்
           சார்ந்திடு மயுதமற் றவர்க்கே.