பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்611

(இ - ள்.) ஈண்டுக் கூறப்பட்ட குருகண்டத்தில் வடபக்கத்தே திங்கட்டீவு என்னும் பெயருடைத்தாகிய ஒருதீவும், வாயுத்திக்கின்கண் பத்திராகரம் என்னும் ஒருதீவும் உள்ளன. அத்தீவுகளிலே அறிவு வன்மையுடைய முனிவரும் சாரணரும் சித்தரும் வாழாநிற்பர். திங்கட்டீவினர் திங்கள்போன்ற வெண்ணிறமுடையோர், பரப்புடைய ஏனைப் பத்திராகரத் தீவிலுறைவோர் செந்தாமரை மலர் போன்ற நிறமுடையர் என்ப.

(வி - ம்.) அன்று, ஏ : அசைகள். வருடம் எனினும் கண்டம் எனினும் ஒக்கும். ஞாங்கர் - பக்கம். வைப்பு - இடம். துப்பு - வலிமை. பப்பு - பரப்பு.

(462)

 இரணியத் தவரூ ணிகுசநற் கனிமெய்
           யெழின்மதி யனையர்வை குறுமவ்
 வருடமைஞ் ஞூற்றைத் தலைப்பெயு மிரண்டா
           யிரம்வயங் கிரமியத் தவரூண்
 பெரியவா லத்துச் சிறுகனி குவளை
           பெறுநிற மயுதவாண் டாயுள்
 அரிவரு டத்தோ ரூண்கரும் பாயுள்
           பன்னிரா யிரநிறம் வெள்ளி.

(இ - ள்.) இனி இரணிய கண்டத்திலுறைபவர்க்கு உணவு, எலுமிச்சம்பழமாகும். மேனிநிறத்தாற் றிங்களைப்போல்வர். அவர் வாழ்நாள் இரண்டாயிரத்தைந்நூறாண்டென்ப. இனி இரமியகண்டத்திலுறைபவர் உணவு பெரிய ஆலமரத்திற் கனிகின்ற சிறிய கனிகள் என்ப. நிறம் குவளை மலர் நிறமாம். அகவை பதினாயிரமாண்டென்ப. இனி அரிகண்டத்திலுறைபவர் ஊண் கரும்பு என்ப. ஆயுள் பன்னீராயிரம் ஆண்டென்ப. அவர் வெள்ளிபோன்ற நிறமுடையர் என்ப.

(வி - ம்.) இதன்கண் இரணிய கண்டத்தோர்க்கு ஆயுள் இரண்டாயிரத்தைந்நூறாண்டென்றே பெற்றாம். சிவதருமோத்தரத்தில் இவர்க்கு ஆயுள் பன்னீராயிரத்தைந்நூறாண்டென்று கூறப்படுகின்றது. இவ்வேற்றுமைக்குக் காரணம் ஆராய்ந்து காண்க.

இனி, எழில்மதி, அம்மதிபோன்ற மேனியராகிய சந்திரத்தீவினர் வாழும் அவ்வருடமாகிய பதினாயிரத்தோடு ஐஞ்ஞூற்றைத் தலைப்பெயும் இரண்டாயிரம் வாழ்நாளாம் என வலிந்தும் வருவித்தும் ஒருவாறு முடிப்பினுமாம்.

(463)

 கிம்புரு டத்தோ ருணவிற லியின்வண் கேழ்கனி நிறந்தம னியச்சீர்
 பம்புறு மாயு ளயுதமே யுரைத்த பண்புறு மெண்வகை வரைப்பும்
 நம்பிவாழ் குநர்க்கு நரைதிரை மூப்பு நலியுநோ யாதிக ளில்லை
 கம்பமற் றில்லர் முதலுகம் போலெக் காலமு நன்மையே கலவும்.

(இ - ள்.) கிம்புருட கண்டத்தில் உறைபவர் உணவு இற்றியினது வளவிய நிறமமைந்த கனியாகும், அவர் உடலினிறம் பொன்னிறம்