பக்கம் எண் :

612தணிகைப் புராணம்

என்ப. சிறந்தபுகழ் பெருகுதற்குக் காரணமான வாழ்நாள் பதினாயிரமாண்டு என்ப. ஈண்டுக் கூறப்பட்ட எட்டுவகைக் கண்டத்திலும் விரும்பி வாழ்பவருக்கு நரை திரை மூப்புத் துன்புறுத்தும் பிணி முதலியன இல்லை. ஆதலால் அவர் வாழ்க்கையில் நடுங்குதல் இலர். அத்தீவினுள் கிருதயுகத்திற் போன்று எல்லாயுகத்தினும் இன்பமே நிரம்பியிருக்கும்.

(வி - ம்.) இறலி - இற்றி; (இத்தி). சீர் - புகழ். நம்பி - நம்பு என்னும் உரிச்சொல்லடியாய்ப் பிறந்த வினையெச்சம். நம்பு - நசை; விருப்பம். கம்பம் - நடுக்கம். கலவும் - கலக்கும்.

(464)

 பாரத வரைப்போர் தோரையே முதலாம் பல்வகை யுண்டியு மழைபெய்
 தேருழன் முதலாம் பற்பல தொழிலு மீண்டிய வேறுவே றுருவும்
 சீரிய தெய்வ மாதிமூன் றானுந் தீவினை நல்வினைப் பயனை
 ஆருமத் திறமு முகத்தின்வேற் றுமையு மடுபிணி யாதியு முளரால்.

(இ - ள்.) இனி எஞ்சிய இப்பாரத கண்டத்திலுறைபவர் தோரை நெல் முதலிய பற்பல வகையான உணவும், மழைபெய்த காலத்தே ஏர் உழுதல் முதலிய பலப்பல தொழில்களும், செறிந்த வேறுவேறான நிறங்களும், சிறப்புடைய ஆதிதைவிகம் ஆதிபௌதிகம் அத்தியாத்மிகம் என்னும் முத்திறத்தானும் வரும் தீவினை நல்வினைகளின் பயன்களை நுகரும் தன்மையும், ஒருவர்க்கொருவர் முகத்தினால் வேற்றுமையும் துன்புறுத்தும் (கொல்லும்) நோய் முதலியனவும் உளராவர்.

(வி - ம்.) தோரை - குளநெல் மூங்கிலரிசியுமாம். மழைபெய்து - பெய்ய என்க. ஆரும் - நுகரும். பிணியாதி - பிணிமூப்புச் சாக்காடுகள்.

(465)

 இற்றிஃ தேனு முரைத்தபா தலத்து மேனையெண் வருடத்து முரையா
 மற்றைய தீவு வானத்து மருவி வரம்பிலின் பாருந ரெல்லாம்
 செற்றிமுற் பவத்து நல்வினை புரிந்த திறத்தினர் குறைபிழை முடிப்ப
 நற்றவ ரிமையார் யாவரு மென்று நண்ணிநல் வினைசெயப் படுமால்.

(இ - ள்.) இப்பாரத கண்டத்தின் தன்மை இங்ஙனமாயினும், முற்கூறப்பட்ட பாதாளலோகத்தினும், இப்பாரத மொழிந்த ஏனைய எட்டுக் கண்டங்களினும், ஈண்டுரைக்கப்படாத ஏனைத் தீவுகளினும், வானுலகங்களினும், எய்தி எல்லையில்லாத இன்பம் நுகர்ந்துறைவோர் அனைவரும், இப்பாரத கண்டத்திலே முற்பிறப்பிலே பிறந்து செறிந்து நல்வினை புரிந்தவர்களே வேறிலர். இனி அவர்செய்த நல்வினையின் குறைகளையும் அவற்றின் நிகழ்ந்த குறைபாடுகளையும் முடித்துக் கோடற்பொருட்டு அம்முனிவரும் தேவரும் பிறரும் என்றென்றும் வந்து நல்வினை தன்கட் செய்யப்படும் பெருமை யுடையது.