பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்613

 இப்பெரு வருடந் தானுமொன் பதுகூ றெனப்படு மொரோவொரு கூறு
 செப்புமா யிரயோ சனையிவற் றினையிந் திரங்கசே ருகநற்றா மிரமே
 தப்பறு கபத்தி நாகமே வளத்த சவுமியங் காந்தரு வம்மே
 வைப்பெனும் வாரு ணந்திகழ் குமரி யென்மர்வண் குமரிமா னுவதில்.

(இ - ள்.) இந்தப் பெரிய பாரதகண்டந்தானும் தன்னுள் ஒன்பது பகுதிகளையுடைத்தென்று கூறப்படும். அப்பகுதிகள் தனித்தனி ஆயிர யோசனை அகல நீள முடைத்தாம். இவற்றினை இந்திரத்தீவு, கசேருகத் தீவு, நல்லதாமிரத்தீவு, தீமையற்ற கபத்தித்தீவு, நாகத்தீவு, வளத்தையுடைய சவுமியத்தீவு, காந்தருவத்தீவு, வாருணவைப்பெனுந்தீவு, விளங்கும் குமரித்தீவு என்று கூறாநிற்பர். இவற்றுள் வளமுடைய குமரித்தீவினை ஒப்பான தீவு பிறிதொன்றில்லை.

(வி - ம்.) எண்மர் என்றும் பாடம். அதற்குக் கருதுவர் எனப் பொருள் கோடல் பொருந்துமேற் கொள்க. கசேருகத்தைச் சேருகம் என்றுங் கூறுவர். கசேருகம் - நாரத்தை. சேருகம் - நாகணவாய்ப்புள்.

(467)

 விந்தமே யருவிப் பாரியாத் திரமே விந்தியஞ் சுத்திகஞ் சையம்
 கந்தமார்மலய மயேந்திர மென்னுங் கடிவரை யேழுமேழ் நகரும்
 அந்தமி லேனைத் தலங்களுங் கங்கை யாதிய பற்பல நதியும்
 மந்திர வேத முறைமையு முடைத்தீ தேனைய மிலேச்சர்வாழ் வனவே.

(இ - ள்.) இக்குமரிக்கண்டம் விந்தம், அருவிமிக்க பாரியாத்திரம் விந்தியம், சுத்திகம், சையம், மணநிறைந்த மலயம், மயேந்திரம் என்னும் விளக்கமுடைய ஏழுமலைகளையும், ஏழுநகரங்களையும் எண்ணிறந்த பிறதிருத் தலங்களையும், கங்கை முதலிய பற்பல பேரியாறுகளையும் மந்திரம் வேதமுதலிய மரபுகளையும் உடைத்து. இஃதொழிந்த ஏனைத் தீவுகள் மிலேச்சர்
வாழுமிடங்களாம்.

(வி - ம்.) ஏழுநகரம் - அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை என்பன. மிலேச்சர் வாழ்வன ஆதலின் அவை இதுபோலச் சிறப்புடையவல்ல என்றவாறு.

(468)

 மலயமால் வரைத்தென் சாரலி னிலங்கை மற்றைய வரையடிச் சாரல்
 நிலையுமா லங்கஞ் சமாக்கிய மழகு நீடுறு மணிமலை சங்கம்
 உலைவறு குமுதம் வராகமு மிமய வோங்கலின் வடகிழக் கெல்லைப்
 பலர்தொழ வுமையோ டெந்தைவீற் றிருக்கும் பருப்பத முளதது கயிலை.

(இ - ள்.) மலயமலையின் தெற்குச் சாரலிலே இலங்கைத் தீவுளது. ஏனைய மலையின் அடிவரைச் சாரலிலே, அங்கநாடும், சாமாக்கிய நாடும், அழகுமிக்க அணிமலை யென்னும் நாடும், சங்கநாடும், துன்பமற்ற குமுதநாடும், வராகநாடும் உள்ளன. இமயமலையில் வடகிழக்கின்கண், அமரர் முதலிய பலரும் தொழும்படி இறைவியோடு பிறவா யாக்கைப் பெரியோன் எழுந்தருளியிருக்கும் மலையுளது. அது கயிலை மலை எனப்படும்.