| வேலையிகழ் விழிக்கணையால் விரைக்கணைகண் | | மாற்றியின்ப வேலை மூழ்கும் | | மாலையர்தா மரையாம்பல் சங்கம்வளர் | | வெள்ளமென வயின்றோ றுள்ளார். |
(இ - ள்.) காலைப் பொழுதிலே கோடி இளஞாயிறு தோன்றினாற் போன்று ஒளியுடைய மணிகள் இழைத்த தேரிலேறிச் செலுத்திப் போய்ப் பூம்பொழில்கள் நறுமணம் பரப்பாநின்ற புறநகரத்தும் அகநகரத்தும் மங்கலப் பொருள்கள் சூழ்ந்துவர மின்போன்ற மகளிருடைய வேலைப்பழித்த விழிகளாலே காமனுடைய மலர்க்கணையின் கொடுமையை அகற்றி, இன்பக்கடலிலே மூழ்கும் தன்மையுடைய சிவகணத்தோர். தாமரையும், ஆம்பலும், சங்கமும், மிக்க வெள்ளமும் என்னும் அளவினராய் இடந்தோறும் உறையாநிற்பர். (வி - ம்.) விழிக்கணையால் அவர் உடம்பாடுபெற்ற அளவிலே, காமத்துயரம் தீர்தலின் விழிக்கணையால் விரைக்கணைகள் மாற்றி என்றார். | "கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற் | | செம்பாக மன்று பெரிது." (குறள் 1092) |
எனவரும் திருக்குறளுங் காண்க. தாமரைமலர் ஆம்பல்மலர் சங்கு முதலியன வளரும் நீர்நிலை என்றும் ஒருபொருள் தோன்றிற்று. (481) | விளங்குசிவ புரிநாப்பண் பளிங்கொளிரா | | லயக்குணபால் விரைத்த கொன்றைக் | | களங்கில் பறைச் சடைமுடிமுக் கண்மழுவுந் | | திரிசிகையுங் கதையும் வாளும் | | துளங்குகரக் கணநாதர் வதிவருயர் | | பாசுபதர் தூய சைவர் | | வளங்கதுவு காபாலர் விரதியர்மெய்த் | | தவருமவ ருருவின் வாழ்வார். |
(இ - ள்.) விளங்காநின்ற அச்சிவலோகத்தின் நடுவேயுள்ள பளிங்கென ஒளிரும் திருக்கோயிலின் கீழ்த்திசையிலே, மணக்குங் கொன்றைமலரும் மறுவற்ற இளம்பிறை யணிந்த சடைமுடியும் முக்கண்ணும், மழு, முத்தலைச் சூலம், தண்டு, வாள் என்னுமிவை விளங்கும் திருக்கைகளும் உடைய சிவகணத் தலைவர் உறையாநிற்பர். ஈண்டே உயர்ந்த பாசுபதரும், தூயசைவரும், வளம்பொருந்திய காபாலரும், மாவிரதியரும், மெய்யாய தவத்தினையுடைய மெய்க்காட்சியாளரும் அச்சிவகணநாதர் உருவத்தோடு உறையாநிற்பர். (வி - ம்.) களங்கு - மறு. இளம்பிறையிற் களங்கமின்மை யுணர்க. (482) |