| தென்றிசையி லயன்வாணி யங்கிராக் | | கபிலர்சித்தர் சனகர் முன்னோர் | | ஒன்றுவர்மேற் றிசைவினையை யொழித்தபூ | | தேசர்முன்னோ ருலவாச் சீர்த்தி | | துன்றுபிரா மியைமுதலோ ரெழுமாதர் | | பத்திரைமுன் றொடர்ந்த வெண்மர் | | அன்றினரா ருயிர்குடிக்கும் பல்வேறு | | வயிரவரு மமர்ந்து வாழ்வார். |
(இ - ள்.) அத்திருக்கோயிலின் தென்றிசையில் மலரோனும், கலைமகளும், அங்கிராவும், கபிலர் முதலிய சித்தர்களும், சனகர் முதலியோரும் சிவப்பணியிலே பொருந்துவர். இனி அதன் மேற்றிசையிலே, இருவினைகளையும் கெடுத்த பூதத்தலைவர் முதலியோரும், அழியாத பெரும்புகழ் பொருந்திய பிராமி முதலிய ஏழு தாய்மார்களும், பத்திரை முதலிய எட்டுக் கன்னியரும், பகைவருடைய பெறற்கருமுயிரைக் குடிக்கும் பல்வேறு வகைப்பட்ட வயிரவரும் இறைவன் திருப்பணியை விரும்பி வாழாநிற்பர். (வி - ம்.) வாணி - கலைமகள். பூதேசர் - பூதத்தலைவர். அன்றினர் - பகைவர். அமர்ந்து - விரும்பி. (483) | வடதிசையிற் றிருமார்ப னுருத்திரர்வா | | னருக்கரட்ட வசுக்கள் வில்லின் | | தடவுநுத லரமகளிர் கந்தருவ | | ரியக்கர்விச்சா தரர்கள் சித்தர் | | சுடர்மணிய சேடர்குய்ய ரிறைவனடி | | யுளத்திருத்தித் தொடர்ந்த வேட்கைப் | | படரொழிய விடுத்தவரும் பாததா | | மரையினுளம் பதித்து வாழ்வார். |
(இ - ள்.) இனி வடதிசைக்கண் திருமகள் உறையும் மார்பனாகிய திருமாலும், பதினொருகோடி யுருத்திரரும், வானத்திலியங்கும் அருக்கர் பன்னிருவரும், வசுக்கள் எண்மரும், விற்போன்று வளைந்த நெற்றியையுடைய அரமகளிரும், கந்தருவரும், இயக்கரும், விச்சாதரரும், சித்தரும், சுடருடைய முடிமணியுடைய உரகரும், பிசாசரும், எம்பெருமானுடைய திருவடிகளை நெஞ்சகத்தே வைத்துத் தம்மைத் தொடர்ந்த அவாத் துன்பம் கெட ஒழித்த சீவன்முத்தரும். இறைவன் திருவடிக்கண் தம் நெஞ்சத்தை அழுத்தி இன்புற்று வாழாநிற்பர். (வி - ம்.) திருமார்பன் - திருமால். தடவு - வளைவு. சேடர் - உரகர். குய்யர் - பிசாசர். படர் - துன்பம். (484) |