| இத்தகையோர் புறஞ்சூழ வாயிரக்கான் மண்டபத்தி லெறுழ்சால் சிங்கப் | | பைத்தமணிப் பீடத்துப் பரசினொடு மானிருகைப் பதித்துச் சார்வோர் | | மெத்துபயந் துரந்துவர மளிப்பவிரு கரமமைத்து வீழிச் செவ்வாய் | | முத்தநகை யுமையோடும் வீற்றிருந்த முதல்வனார் திருமுன் னாக. |
(இ - ள்.) இத்தகைய மாண்புடையோர் புறமெலாம் சூழாநிற்ப ஆயிரக்கால்மண்டபத்தில் வலிமைமிக்க அரிமானுருவமைந்த பசியமணி யழுத்திய அணையின்கண், பரசும் மானும் இருகையினுந் தாங்கித் தம்மைச் சார்கின்ற மெய்யடியாருடைய மிக்க அச்சத்தை அகற்றி வரமளிப்பனவாக இரண்டு திருக்கைகளை யமைத்து, வீழிக்கனி போன்று சிவந்த திருவாயும் முத்துப்போன்ற பற்களும் உடைய உமையம்மையாரோடு வீற்றிருந்த முழுமுதல்வனாராகிய சிவபெருமான் திருமுன்னர். (வி - ம்.) எறுழ் - வலிமை. வீழி - ஒருசெடி. அதன்கனிக்கு ஆகுபெயர். (485) | சுந்தரத்து விடையமரு மதன்பாங்கர்ச் செய்யநிறச் சுமனை வெள்ளை | | அந்தநிறச் சுரபிகா பிலநந்தை கரியசுபத் திரைபார் தூமம் | | நந்துநிறச் சுசீலையெனு மைந்துமினி திருக்குமிங்க ணவின்ற வாவின் | | முந்தெழுகோட் டடித்தலத்து மலரவனுந் திருமாலு முற்று வாழ்வார். |
(இ - ள்.) அழகினையுடைய விடை அமர்ந்திருக்கும். அவ்விடையின் பக்கத்தே செந்நிறமுடைய சுமனையும், வெள்ளையாகிய அழகிய நிறமுடைய சுரபியும், கபிலநிறமுடைய நந்தையும், கரியநிறமுடைய சுபத்திரையும், பொருந்திய புகைபோன்ற நிறமுடைய சுசீலையும், என்னும் ஐந்து கடவுளான்களும் இனிதே அமர்ந்திருக்கும். ஈண்டுக் கூறப்பட்ட ஆன்களின் முகத்திலே தோன்றும் கொம்பின் அடிப்பகுதியிலே மலரோனும் திருமாலும் பொருந்தி உறையாநிற்பர். (வி - ம்.) சுந்தரம் - அழகு. விடை - எருது; ஈண்டு நந்திதேவர் கபிலம் - ஒருநிறம். தூமம் - புகை. நந்தும் - உவமவுருபு. (486) | கோட்டினுதிச் சராசரமும் பல்வகைத்தீர்த் தமுஞ்சிரத்துக் குழக னெற்றி | | மாட்டமலை மேனாசி வையிலைவே லேமகநா சியினா கேசர் | | ஓட்டமதி லுதயவத்த மனசந்தி பல்லின்வளி யோசை கண்ணில் | | காட்டுமிரு சுடர்கன்ன மிரண்டினசு வினிதேவர் கடலோ னாவில். |
(இ - ள்.) அக்கொம்பின் நுனிப் பகுதியில் இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளும் ஆகிய உலகமும், பல்வேறுவகைத் தீர்த்தங்களும் பொருந்தியிருக்கும், தலையிற் சிவபெருமானும், நெற்றியின்கண் இறைவியும், நாசியின்மேல் கூர்த்த வேற்படையை எறியும் இளைய பிள்ளையாரும், நாசியினுள் வானவர் தலைவரும், உதடுகளில் உதய அத்தமனங்கட்குரிய தெய்வங்களும், பல்லின்கண் ஓசையுடைய காற்றும், கண்களில் ஞாயிறுந்திங்களும், செவியிரண்டினும் அசுவினி தேவரும், நாவில் வருணனும். |