(இ - ள்.) அறுசுவை யுணவு, விசிறி, குடை, செருப்பு, ஆடை, பொன், வெள்ளி முதலிய பொருள், வெவ்விய பிணிதீர்க்கும் மருந்து, குடம், நீர்க்கரகம், அக்கமணி முதலிய அணிகலன், என்னும் இன்னோரன்ன பொருள்களைச் செவ்வியும் இடனுமறிந்து வழங்கும் மிக்க வண்மையினை யுடையோர் அந்த அந்தப் பொருட்குரிய கொடைப் பயனைச் சிவலோகத்தினும் நுகர்ந்து, அமரரும் அழுக்காறெய்தும்படி இப் பாரதக் கண்டத்து மன்னராய்ப் பிறந்து வெற்றியோடு ஆண்டிருந்து இறுதியிற் பரமுத்தியும் பெறுவர். (வி - ம்.) கழல் - பாதக்குறடுமாம். தெரிந்து, என்றது காலமுமிடனும் தகுதியும் தெரிந்து என்றவாறு. நறுமுறுத்தல் - குறிப்பு மொழி, அழுக்காறு கொள்ளல். (503) | புகலான்ம தத்துவத்தி னைம்பூத மகங்காரம் புந்தி மூலத் | | தகலாநின் றிடுமண்ட மெட்டவற்றுட் பகுதியண்ட முகட்டி னீசன் | | பகலாத வுமையாம்பன் னகப்பள்ளி மலர்ப்பள்ளி பயிலுந் தேவர் | | தகலாநின் றமருலகந் திப்பியமா யோரைந்து தவிரு மன்றே. |
(இ - ள்.) கூறப்படும் ஆன்மதத்துவத்தின்கண், ஐம்பூதத்திலும், அதற்கு மேலாகிய அகங்கார தத்துவத்திலும், புத்திதத்துவத்திலும், பிரகிருதிதத்துவத்திலும் ஒன்றற்கொன்று விரிவுடைய எட்டு அண்டங்கள் உள, அவையிற்றுள் வைத்துப் பிரகிருதியண்டத்துச்சியில், தாமரைப் பள்ளியிலும் பாம்புப்பள்ளியிலும் உறைகின்ற பிரமதேவன் உலகமும் திருமால் உலகமும் யாம் உறைகின்ற கந்தலோகமும், இறைவனைவிட்டு நீங்காத உமையன்னையாருலகமும், சிவலோகமும் ஆகிய ஐந்தும் நிரலே ஒன்றன்மே லொன்றாக யிருக்கும். (வி - ம்.) ஆன்மதத்துவம் - பூதங்களைந்தும், தன்மாத்திரையைந்தும் அறிகருவிகள் ஐந்தும், தொழிற் கருவிகள் ஐந்தும் உட்கருவிகள் நான்குமாகிய உயிரோடு தொடர்புடைய இருபத்துநான்குமாம். மூலம், பகுதி என்பன பிரகிருதி. பகல் - வேறுபடல், பகலில்லாத உமை என்க. யாம் என்றது முருகப் பெருமான் தன்னைக் குறித்தவாறு. யாம் பயிலும் உலகம் என்க, அஃதாவது - கந்தலோகம். தவிர்தல் - தங்குதல். (504) | வேதனுக்குக் கடாகநெடு முகட்டினதன் மேற்றுளப விரிபூந் தாராற் | | கோததன்மே னமக்கதன்மே லுமைக்கதன்மே லீசற்கு மூழின் வைகும் | | சோதிவளர் சிவலோகம் புகுந்தோர்மீ ளுவதில்லை சோதி செய்ய | | பாதமலர் தனின்முடிவிற் கலந்துபரா னந்தவெள்ளம் படிவர் மாதோ. |
(இ - ள்.) அண்டகடாக முகட்டின்கண் பிரமதேவன் உலகமும்; அதற்குமேல் துளபமாகிய விரிந்த மலர்மாலையுடைய திருமாலுலகமும், அதற்குமேல் எம்முடைய உலகமும், அதற்குமேல் உமையுலகமும், அதற்குமேல் சிவலோகமும் முறையே உள. ஒளிமிகும் சிவலோகத்தே புகுந்தோர் பிறப்பின்கண் மீள்வதில்லை. ஒளிப்பிழம்பாகிய இறைவனுடைய சிவந்த திருவடிமலரின்கண் இறுதியிற் கலந்து உயரிய பேரானந்தப் பெருங்கடலிலே முழுகாநிற்பர். |