பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்631

பதினாயிரமூழி இனிதே இன்புற்றிருந்து பின்னர்ப் படிப்படியாக நம்முலகமுதல் மண்ணுலகம் ஈறாகக் கீழ்க்கீழ் இறங்கி இறுதியில் பரமுத்தியை எய்தாநிற்பர்.

(வி - ம்.) கை - ஒழுக்கம். கவின்ற - அழகிய. பூரணி - முதல்வி. ஐயென : குறிப்புமொழி, இனிதாகவென்க.

(507)

 நுனக்கிவண் மொழிந்த முறையினைக் கற்றோர்
           நுண்பொரு ளாய்ந்தவர் பிறர்க்கு
 மனக்கொளத் தெரிப்போ ரம்முறை நீதி
           வழிநடப் போர்நடப் பிப்போர்
 தனக்கணஞ் செறித்துப் படிப்பித்தோர் முடிவிற்
           றகுமுறை தனக்கரும் பூசை
 கனக்கரி சிரிய வாற்றினோர் தாமுங்
           கரைந்தவச் சிவபுரங் கலப்பார்.

(இ - ள்.) அகத்தியனே! யாம் உனக்கு அருளிச்செய்த இத்திருமுறையை (நூலினை)க் கற்றவரும், இதன்கட் பொதிந்துள்ள பொருள் நுணுக்கங்களை ஆராய்ந்தோரும், இந்நூலினைப் பிறர் மனங் கொள்ளும்படி விளக்கிக் கூறினோரும், இந்நூலிற் கூறப்பட்ட நீதியை மேற்கொண் டொழுகுவோரும், பிறரை ஒழுகச் செய்வோரும், ஓதுபவர்க்குப் பொருள்களை நிரம்ப வழங்கி ஓதுவித்தோரும், இந்நூல் ஓதிமுடியும் நாளிலே தகுதியுடைய இத்திருமுறைக்கு அரிய வழிபாட்டினைத் தமக்குச் சுமையாகிய தீவினைகெட்டோடும்படி இயற்றினோரும், ஆகிய இவரெல்லாம் ஈண்டுக் கூறப்பட்ட அந்தச் சிவலோகத்தை அடைவர்.

(வி - ம்.) முறை : நூலுக்கு ஆகுபெயர். தனக்கணம் - பொருட்குவை. கனக்கரிசு - பாரமாகிய தீவினை. கரைந்த - கூறிய. தெய்வத் திருவருள் நூல்களை அத் தெய்வமே போன்று நாளும் வழிபாடியற்றி நலங் கொள்ளுதல் நம் தலைக்கடனாகும். வழிபாடென்பது அதனை யாண்டும் இனிதுறப் பரப்பிப்
போற்றுதலேயாம்.

(508)

 வீங்கிய செருத்த லானிட மியல்பும்
           விளம்பினம் விளம்பின யாவும்
 ஓங்கிய சிவதன் மோத்தரத் தனகா
           ணொரோவொரு வயின்மற்றாகமங்கள்
 தாங்கிய முறையொவ் வாமையு முடைத்து
           ததையுயிர்ப் பக்குவக் கியையப்
 பாங்குறு சிருட்டி தொறும்பரன் வேறாய்ப்
           பயிற்றுமா தலினதி னயிர்த்தல்.