(இ - ள்.) பருத்த மடியினையுடைய ஆன்கள் இடமும் அவற்றின் தன்மையும் கூறினேம். ஈண்டு யாம் நினக்குக் கூறியன எல்லாம் உயர்ந்த 'சிவதருமோத்தரம்' என்னும் நூலிடத்துக் கூறப்பட்டனவேயாம். ஈண்டுக் கூறப்பட்ட பொருள் ஒவ்வோரிடத்தே ஏனை ஆகமங்கள் கூறுவனவற்றோடு முரணுதலும் உண்டு. அங்ஙனம் முரணுதற்குக் காரணம் செறிந்த உயிரினங்களின் பரிபக்குவத்திற்கியையக் கூறுபாடுடைய படைப்புத்தோறும் இறைவன் வேறு வேறாகவும்படைத்த லுடைமையே ஆதலின் அம்முரண்களாலே இந்நூலை நீ ஐயுறாதே கொள். (வி - ம்.) சிவதருமோத்தரம் - முருகப்பெருமான் அகத்தியனுக்கருளிய ஒரு மெய்ந்நூல். இதனை மறைஞான சம்பந்த நாயனார் தமிழில் இயற்றியுள்ளார். அயிர்த்தல் : வியங்கோள், அல்லீறு எதிர்மறை. (509) | அரிறபு நூலைத் தெரிக்குமா ரியற்கக் கரமொன்றற் காடகக் காசொன் | | றுரிமையி னளித்த லுள்ளவ னில்லா னுதவுக செம்புறு காசு | | தருபயன் கருதா தாரியன் றெரிக்க தகுங்குறி யெதிர்ப்பையி தென்னக் | | கருதுறா தளிக்க வாரியற் கடிமை யலதுகைம் மாறொன்று மிலதே. |
(இ - ள்.) குற்றமற்ற இந்நூலை ஓதுவிக்கும் நல்லாசிரியனுக்கு மாணவன் பொருள்மிக்குடையனாயவழி எழுத்தொன்றற்கு ஒரு பொற்காசு விழுக்காடு அன்புரிமையோடு வழங்கக்கடவன். மாணவன் பொருளில்லானாய விடத்து எழுத்தொன்றற்கு ஒரு செப்புக்காசேனும் வழங்குக. இனி இந்நூலை நன்மாணாக்கர்க்கு அறிவுறுத்தும் ஆசிரியன் அம்மாணவர் தரும் பொருள் முதலிய பயன்களைக் குறிக்கொள்ளாமல் அன்பே தலைக்கீடாக அறிவுறுத்தக்கடவன். நல்லாசிரியனுக்குத் தன் மாணாக்கர் அன்படியார் ஆதலே கைம்மாறாகும். வேறு கைம்மாறில்லை. ஆகவே ஆசிரியன் மாணவர்பால் எமக்குத் தகுதியான கைம்மாறு இஃதெனப் பிறிதொன்றனையும் கருதாமல், அறிவுறுத்தல் வேண்டும் என்றாம். (510) | அன்னமு மொரோவொன் றெழுத்தொரோ வொன்றற் | | கான்றவர்க் கூட்டுதல் கடனால் | | மன்னுபுத் தகத்தை யீசனைக் குருவை | | மரபினாற் பூசைசெய் யாரேல் | | துன்னுறு பயனை யிழப்பது மன்றித் | | தொக்கவெந் நிரயமுந் துளைவார் | | நன்னர்நெஞ் சுவப்பப் பூசனை புரியி | | னாடிய பொருளெலாம் பெறுவார். |
(இ - ள்.) இனி, இந்நூல் ஓதுவிக்கும் நல்லாசிரியனுக்கு எழுத்தொன்றற்கு ஒருசோறு விழுக்காடு ஊட்டுதல் நன்மாணவன் கடமையாம். இனி, மாணவர் அறிவு நிலைபெற்ற இந்நூலினையும் இதனால் |