பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்633

அறிவுறுத்தப்படும் இறைவனையும் இதனை ஓதுவிக்கும் நல்லாசிரியனையும் வழிபாடியற்றுக. இங்ஙனம் வழிபடமாட்டாரெனின் அவர் இந்நூலாலெய்தும் பயனை இழப்பதோடல்லாது தொகைபட்ட கொடிய நரகத்திலும் வீழ்ந்தழுந்தாநிற்பர். நலமுடைய தம் மனம் மகிழும்படி வழிபாடு செய்வோர் தாம்தாம் விரும்பிய பொருளெல்லாம் விரும்பி யாங்குப் பெற்று மகிழ்வர்.

(வி - ம்.) அன்னம் - சோறு. ஆன்றவர் - ஆசிரியர்.

(511)

 என்றுசூ ருயிரைக் குடிக்கும்வே லிறைவ
           னியம்பிய ஞானமுற் றுணர்ந்து
 நன்றுவீ றன்பிற் பன்முறை தாழ்ந்து
           நளினமொத் தலர்ந்ததா ணீழல்
 ஒன்றியாங் கடித்தொண் டுஞற்றினன் பன்னா
           ளுறைந்துபின் னாரிய னருளால்
 மன்றல்சூழ் பொதிய மடுத்துமுத் தமிழை
           வளர்த்துவாழ்ந் திருந்தனன் முனிவன்.

(இ - ள்.) என்றிவ்வாறு சூரபதுமன் முதலியோர் உயிரைக் குடித்த ஆற்றல் சால் வேற்படையை ஏந்திய முருகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய ஞான முதலியவற்றை ஐயந்திரிபற நன்குணர்ந்து கொண்டவனாய் அகத்தியமுனிவன், அப்பெருமான் திருவடியின்பால் பெரிதும் மிக்குச் செல்லாநின்ற அன்பு காரணமாகப் பலகாலும் வீழ்ந்து வணங்கித் தாமரைமலர்போன்று மலர்ந்த அத்திருவடியின் அருள்நீழலிலே பொருந்தி அத்திருத்தலத்திலேயே பற்பலநாள் உறைந்து அடித்தொண்டு இயற்றாநின்றனன். பின்னர், அப்பெருமான் திருவருள் பெற்று நறுமணங்கமழ்தற்கிடமான பொதியமாமலையினை எய்தி, ஆண்டு 'இயல் இசை நாடகம்' என்னும் மூன்று கூறுடைய செந்தமிழ் மொழியினை வளர்த்து இவ்வுலகமுய்யும்பொருட்டு இனிதே வாழ்ந்திருப்பானாயினன்.

(வி - ம்.) சூர் - சூரபதுமன். நன்று - பெரிது, வீறு - வேறொன்றற் கில்லாத சிறப்பு. உஞற்றினன் - முற்றெச்சம். ஆரியன் - ஆசிரியன், ஈண்டு முருகன். மன்றல் - நறுமணம். முனிவன் - அகத்தியன்.

(512)

 மும்மல மிரித்து நன்மையை வேட்ட
           முனிவிர்காண் முனிவரற் கிலைவேற்
 செம்மலன் றளித்த திருத்தகு ஞானஞ்
           செயிர்தபத் தெருட்டினங் கண்டீர்
 விம்மமெய்ஞ் ஞானத் திருநிறை தலினால்
           விளங்குசீ பூரண நாமம்
 அம்மலைக் கான தன்றியுஞ் செல்வத்
           தாயதுங் கேட்கவென் றறைவான்.