(இ - ள்.) ஆணவ முதலிய மூன்று மலங்களையும் கெடுத்துச் செம்பொருளாகிய நலத்தை விரும்பிய முனிவர்களே. அகத்தியனாகிய முனிப்பெரியோனுக்கு அக்காலத்தே இலையுடைய வேற்படையினையுடைய இறைவன் திருவாய்மலர்ந்தருளிய, செல்வமாந் தகுதியுடைய ஞானத்தினை நம்மலக்குற்றந் தீரும்பொருட்டு இதுகாறும் உணர்த்தினேம். அத்திருத்தணிகை மலையின்கண் அம்முருகன் செவியறிவுறுத்த மெய்ஞ்ஞானமாகிய செல்வம் பெரிதும் நிறைந்துள்ளமையால் அம்மலைக்கு விளங்காநின்ற 'சீபரிபூரணமலை' என்னும் திருப்பெயர் வழங்குவதாயிற்று. இனி ஞானச்செல்வமே யன்றியும் அம்மலைக்கு உலகப் பொருள் முதலியவற்றானும் அப்பெயர் தக்கதே ஆதலையும் கூறுவேம் கேண்மின் என்று, சூதமுனிவன் திருவாய்மலர்ந்தருளத் தொடங்கினன். (வி - ம்.) மும்மலம் - ஆணவம், மாயை, கன்மங்கள். செம்மல் - முருகன். (513) அகத்தியன் அருள்பெறு படலம் முற்றிற்று. (ஆகத் திருவிருத்தம் - 1386.) |