மணமிக்க குழலினை யுடையாளாகிய சுகுமாரி யென்னும் மனைவியோடுங் காட்டின்கட் சென்று (அவள் வழிபாடியற்ற) தவத்தின்கட் பொருந்தினான். (அப்பிரபாகரன் வானப்பிரத்தம் புக்கபின்னர்) அந்நான்கு புதல்வரும் (யாண்டும்) நீதி நிலைபெற ஆணை செலுத்தி அரசாட்சி செய்யும் அக்காலத்து. (வி - ம்.) பரேரெறுழ்த்தோள் - பருத்த அழகினையும் வலியினையு முடைய தோள் "படலைக்கண்ணிப் பரேரெறுழ்த்திணி தோள்" நெடுநல்வாடை 31ஆவது வரி. கந்தம் - மணம். (3) | குறுமுனிமுன் னிருவர்க்குங் குமரன்மான் மியங்கிளந்தான் | | உறுகிரண விந்திடப யோகிபின்னோர்க் குயர்கன்னி | | தெறுவினைச்சாத் தன்காதை தெரித்தனராங் கெறுழ்ப்பன்மன் | | கறுவுகொள்வா ரணக்கொடியாங் காதலினைக் கருத்தமைத்தான். |
(இ - ள்.) அகத்திய முனிவர் சூரன் பன்மன் என்னும் இருவர்க்கும் என்று மிளையோனாகிய முருகக் கடவுளின் பெருமையை யெடுத்துச் செவியறிவுறுத்தினன். தவத்தின்மிக்க கிரண விந்து வென்னும் முனிவனும் இடபயோனியும் சூரன் பன்மன் ஆகிய இவர்களின் பின் தோன்றினவர்களாகிய சிங்கன் தாரகனாகிய இவ்விருவர்களுக்கும் யாவரினும் வீரத்தானுயர்ந்த துர்க்கையும், பகைவரைக் கொல்லுந் தொழிலமைந்த சாத்தனுமாகிய இவர்களின் கதையினைச் செவியறிவுறுத்தினன். அஞ்ஞான்று அவருள் வலியினையுடைய பன்மனென்பவன் சீற்றத்தினைத் தன்னகத்தே கொண்ட கோழிக் கொடியாகத் தானாகும் அன்பினை மனத்தின்கண் அமைத்தனன். (வி - ம்.) உறு - மிக்க. கன்னி - துர்க்கை. தெறுவினை - கொல்லும்வினை. சாத்தன் - ஐயனார். கறுவுகொள் - சீற்றத்தினைக்கொண்ட. (4) இதுவரை மூன்று செய்யுளுங் குளகம். | சூரனுமற் றிருவரும்வேல் சுடர்கரத்தான் முதன்மூவர்க் | | கேருறும்வா கனமாத லிவறினா ரக்கணமே | | பாரளிப்ப மைந்தர்தமைப் பணித்தேகிக் கயிலைவரைச் | | சாரலினான் குறழ்பதினா யிரமாண்டு தவம்புரிந்தார். |
(இ - ள்.) சூரன், சிங்கன், தாரகன் என்னு மூவரும் ஒளியினோடு கூடிய வேற்படையினைத் திருக்கரத்திற் கொண்ட முருகக் கடவுளை முதலாகக் கொண்ட துர்க்கை, சாத்தன் ஆகிய மூவர்க்கும் அழகு பொருந்திய (மயில், சிங்கம், யானையாகிய) ஊர்தியாதற்கு விருப்பங் கொண்டனர். அக்கணமே தங்கள் புதல்வர்களை உலகத்தைக் காக்கும் வண்ணம் பணித்துக் கயிலாயமலையின் பக்கலிலே சென்று நாற்பதினாயிரமாண்டுகள் தவமியற்றினார். (வி - ம்.) சூரன் முதலிய மூவரும் மயிலுஞ் சிங்கமும் யானையுமாம் வண்ணங் கருதின ரென்க. உறழ்தல் - பெருக்கல். ஏர் - அழகு. 'ஏரழகுழுபெற்றப் பேர்' - நிகண்டு. இவறுதல் - விரும்புதல். (5) |