பக்கம் எண் :

638தணிகைப் புராணம்

சேவலினையும், வாயிலின்கண்ணே நிறுத்திக் கோவிலுனுள்ளே சென்றனன். மாயன் முதலிய தேவர்களும் தத்தம் ஊர்திகளைப் புறத்தே நிறுவிக் கோவிலினுள்ளே சென்றனர். ஏனைய தேவர்கள் வலியினையுடைய ஊர்திகள் வென்றியினையுடைய மயிற்சேவலை வணங்கில வென்க.

(வி - ம்.) பொன் என்பது பொலமென ஈறு திரிந்துநின்றது. இதனை "பொன்னென் கிளவி யீறுகெட முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ், செய்யுண் மருங்கிற் றொடரியலான" என்னுஞ் சூத்திரத்தா னுணர்க. "சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு, மாயிருந்தூவி மயிலலங் கடையே" என்னுஞ் சூத்திரத்து, ஆசிரியர் தொல்காப்பியனார் சேவற் பெயர்க் கொடை மயிலினுக்கு நேராராயினும் உரையாசிரியர், செவ்வே ளூர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்று கூறலின் வெற்றிமயிற் சேவ லென்றார். இவ்வுரையாசிரியர்க்கு முன்னரே இம்மரபு எழுந்து "முன்னுறு மஞ்ஞையஞ்சே வன்மேலேறி" எனக் கந்தபுராண முதலிய நூல்களிற் காணப்படுதலின் உரையாசிரியர் இங்ஙனம் அமைதி கூறினாரென் றுணர்க.

(8)

 கூளியர்கள் சினங்கொளூத்தக் கொதித்தெழுந்து மயில்சேவல்
 வாளிமைக்கும் வைகுண்ட முதல்வரைப்பெ லாமழித்து
 நீளரவப் பகைமுதலா யூர்தியுயிர் நீத்தமைந்த
 மீளுமறு முகனோக்கி விளைத்ததிவ ரெனக்கேட்டு.

(இ - ள்.) (சூரன் முதல் நால்வராகிய) பூதர்கள் (நீவிர் செவ்வேளூரும் வாகனமாகவும் உயரிய கொடியாகவு மிருக்க நுங்களைக் கருடன் முதலிய வூர்திகள் வணங்கவில்லையே என்று கூறிச்) சீற்றத்தினை யுளவாக்க மயிலுஞ் சேவலும், ஒளிவிட்டு விளங்குகின்ற வைகுண்ட முதலிய பதவிகளை யெல்லாங் கெடுத்து நீண்ட பாம்பின் பகையாகிய கருடன் முதலிய வாகனங்களை யெல்லாங் கோறல் செய்தமைந்தன. (இறைவனை வணங்கி) மீடலுறுகின்ற அறுமுகப் பெருமான் திருக்கண்சாத்தி இச் செயலினைச் செய்தது (இப்பூதர்களாகிய) இவர்களே யாவரெனக்
கேள்வியுற்று.

(வி - ம்.) வாள் - ஒளி. "வாளொளியாகும்" தொல்காப்பியம். அரவப்பகை - கருடன். அமைந்த : அன்கெட்ட அஃறிணைப் பன்மை முற்று.

(9)

 தறுகணவு ணக்குலத்துச் சாருதிரென் றவர்க்கருளி
 இறுமுலகோ டூர்திகளை யினிதெழுப்பிச் சுரர்க்களித்தான்
 மறுவறுகா சிபமுனிக்கு மாயைபான் முதலிருவர்
 எறுழுடலொன் றினிற்பிறந்தா ரேனையர்வெவ் வேறுதித்தார்.

(இ - ள்.) அஞ்சாமையோடுங் கூடிய அவுணக் குலத்தின்கண்ணே சென்று பிறக்கக் கடவீரென்றருளிச் செய்து அழிந்த வைகுண்ட முதலிய உலகங்களுடனே கருடன் முதலிய ஊர்திகளையும் இனிதாக எழுப்புதலைச் செய்து தேவர்களுக்குக் கொடுத்தனன். (காமம் வெகுளிமயக்கமாகிய) குற்றமற்ற காசிபரென்னு முனிவர்க்கு மாயை யென்பவளிடத்திற்