சூரன் பதுமனென்னும் முன்னைய ரிருவரும் வலிபொருந்திய ஓருடலிற் றோற்ற முற்றனர். ஏனைய சிங்கன், தாரகன் என்னுமிருவரும் வெவ்வேறாகத் தோன்றினர். (வி - ம்.) தறுகண் - அஞ்சாமை. எறுழ் - வலி, இதனை 'எறுழ் வலியாகும்' தொல்காப்பியச் சூத்திரத்தானுணர்க. (10) | தாதையரு டவம்விலக்கித் தாயருளு மாசிவறி | | மேதகுதங் குலத்தாசான் விளம்பியசூழ்ச் சியினிறைவன் | | பாதநினைந் தனர்வேள்வி பன்னெடுநா டவப்புரிந்து | | மாதொருபா லுடையபிரான் வரவேண்டும் வரம்பெற்று. |
(இ - ள்.) தந்தையாகிய காசிப முனிவர் அருளிச்செய்த தவத்தினை யொழித்துத் தாயாகிய மாயை யென்பாள் அருளிச்செய்த குற்றங்களை விரும்பி மேன்மை பொருந்திய தங்கள் குலகுருவாகிய சுக்கிரன் அருளிச்செய்த சூழ்ச்சியினால் இறைவனாகிய சிவபெருமான் திருவடிகளை நினைந்து வேள்வியினையும் தவத்தினையும் நீண்ட பலகாலஞ் செய்தலான் உமையம்மையாரை ஒருபங்கிலுடைய சிவபெருமான் (தவத்திற்கிரங்கி) யெழுந்தருள (தாங்கள்) விரும்பிய வரங்கள் பெற்று. (வி - ம்.) நினைந்தனர் : முற்றெச்சம். வேள்வியுந் தவமும் பன்னெடுநாட் புரிந்து, எனக் கூட்டுக. புரிந்து - செய்தென்னெச்சங் காரணப் பொருட்டு. (11) | மாதிரத்தெண் மரைவணக்கி வளஞ்சூறை யாட்டயர்ந்து | | காதியுவ ணத்திறையைக் கடற்பாயல் வளந்தெவ்விப் | | போதனம ருலகமும்வை குந்தமும்புல் லெனக்கவர்ந்து | | பாதலமும் பணித்தெல்லாப் பாக்கியமுங் கைக்கொண்டார். |
(இ - ள்.) எண்டிசையினுமுள்ள இந்திரன் முதலிய காவலர்களை வணங்கச்செய்து அத்திசையின்கண்ணுள்ள வளங்களைக் கொள்ளை கொண்டு கருடனை வாகனமாகவுடைய திருமாலை மோதி அவன் கடற்படுக்கையின் கண்ணுள்ள வளங்களைக் கைக்கொண்டு பிரமன் தங்குஞ் சத்திய லோகமும், வைகுந்தமும் பொலிவழிந்து தோன்ற (ஆண்டுள்ள பொருள்களைக்) கைக்கொண்டு பாதலத்தினையுந் தன்னடிப்படுத்து எல்லாச் செல்வங்களையுங் கைப்பற்றின ரென்க. (வி - ம்.) தெவ்வி - கைக்கொண்டு தோன்ற. புல்லென - பொலிவழிந்து. மாதிரம் - திசை. சூறையாட்டயரல் - கொள்ளையிடல், இதனை "அணிநிலா வீசுமாலை யரங்கு புல்லெனப் போகி, துணிநிலா வீசுமாலைப் பிறைநுதற் றோழிசேர்ந்து" எனவரும் சிந்தாமணி இலக்கணையாரிலம்பகம் 152 ஆம் செய்யுளடியானும் உரையானு முணர்க. (12) | தானவர்கள் களிதூங்கத் தடங்கடலி னகரியமைத் | | தானிருந்து முடிசூடி யணங்கனையார் தமைமணந்து |
|