| வாளி தூண்டிநு தற்க ணுக்கிரை மார னாதலுங் கால்பொரும் | | பூளை வீயென வோடி நாள்பல போன பின்புல வோர்குழாம் | | மீள வண்மியி றைஞ்ச நாதன்வி றற்க ணங்கண நாதர்கள் | | மூளு மன்பினர் யாரு முற்றுற முன்னி னானிம யத்தலை. |
(இ - ள்.) மன்மதன் (இறைவன் மாட்டு) அம்பினைச் செலுத்தி நெற்றிக்கண்ணிற் கிரையாகத் தேவர் குழாங்கள் காற்றான் மோதுண்ட பூளைப்பூவினைப் போல (அஞ்சி) ஓடிப் பலநாட் சென்றபின்னர் மீளவும் அணுகி வணங்க இறைவன் வலியோடு கணங்களும் கணத்தலைவர்களும் மிகும் அன்பினையுடைய யாவருஞ்சூழ இமயமலையின்கட் சென்றான். (வி - ம்.) முற்றுற - சூழ. மூளும் - மிகுகின்ற. மாரன் தூண்டி கண்ணுக்கு இரையாதலும் என்க. புலவோர் - தேவர். நாதன் - சிவன். (18) | மலிச னங்கள்பொ றாது தாழ்ந்தவ டாது பார்சம மாக்குவான் | | ஒலித மிழ்க்குர வற்றெ னாதுயர் மலய வெற்பினு றுத்தபின் | | கலிகெ ழும்வரை வாற்றி யாவருங் கைய கன்றுதம் வைப்புறக் | | குலவு மாதினை வெள்ளி மால்வரை கொண்ட ணைந்துபன் னாள்செல. |
(இ - ள்.) மிக்க மாந்தர்களைப் பொறுக்கமாட்டாமல் தாழ்வுற்ற வடாது பாரினைச் சமமாக்கும் பொருட்டு, நாளுக்குநாள் தழைக்கின்ற தமிழாசிரியனாகிய அகத்தியனைத் தெற்கின்கண்ணுள்ள பொதியிலின் கண்ணே சேர்த்தபின்னர் முழக்கம் பொருந்திய திருமணத்தை முடித்து யாவரும் நீங்கித் தங்கள்தங்கள் இடத்தினைக் குறுக. விளங்குகின்ற உமையம்மையாரை வெள்ளிமலையின்கட் கொண்டுசென்று பலநாட் செல்லா நிற்க. (வி - ம்.) ஒலி - தழைத்த, கலி - முழக்கம். கை - உபசர்க்கம். வரைவு - மணம். (19) | வலாரி யாதிவிண் ணோரி ரப்பம ரீஇய தொன்முக மாறொடும் | | நிலாவி நெற்றிவி ழிக்க ணொவ்வொரு நீடி ரும்பொறி காற்றினன் | | கலாவி யந்தர மெங்கு மப்பொறி கண்ணி மைப்பின்ஞெ மிர்ந்தன | | சுலாவு நெஞ்சின ராகி யஞ்சினர் தொக்க மான்முத லோரெலாம். |
(இ - ள்.) இந்திரன் முதலிய தேவர்கள் குறையிரப்ப அதோ முகத்தோடுகூடிய ஆறுமுகங்களுடன் பொருந்தி (அவ்வறுமுகத்தின் கண்ணுள்ள) நெற்றி விழிகளினின்றும் ஒவ்வொரு மிக்கபெரிய அழற்பொறி சிந்தும்படி செய்தனன். அவ்வழற்பொறிகள் ஆகாய மெங்குஞ்சுலவுற்று இடைப்பொழுதின்கட் பரந்தன. கூடிய மான் முதலாகிய தேவர்கள் யாவரும் சுழலு நெஞ்சினராகி யச்ச முற்றனர். (வி - ம்.) தொன் முகம் - அதோமுகம். அஃதாவது கீழ்நோக்கிய முகம். இதனை 'ஐந்து முகத்தோ டதோமுகமுந் தந்து' என்னுங் |