பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்645

 ஆறு மாமுக மாறி ரட்டிய வங்கை யோடொளிர் கந்தனை
 ஏறி வந்தரு ளேற்றின் வாங்கியி ருத்தி மாதுமப் பாலுற
 நீறு சேர்திரு மேனி யானெடு வெள்ளி யங்கிரி யெய்துபு
 வீறு சேரணை வீற்றி ருந்தனன் விண்ணு ளார்துயர் மண்ணவே.

(இ - ள்.) ஆறு முகத்தோடும் பன்னிரண்டு அழகிய கைகளோடும் விளங்குகின்ற கந்தக் கடவுளைத் தான் ஏறிவந்த அருளோடு கூடிய இடபத்தின் வாங்கி இருக்கச்செய்து உமையம்மையாரும் இடப்பக்கத்தே பொருந்தியிருப்ப நீற்றினை யணிந்த திருமேனியினையுடைய சிவபெருமான் நீண்ட வெள்ளிமலையினைப் பொருந்தி வேறொன்றற் கில்லாத சிறப்பினையுடைய சிங்கவணையின்கண்ணே தேவலோகத்தின்கண்ணுள்ள தேவர்கள் துன்பினைக் கழுவும்பொருட்டு எழுந்தருளியிருந்தன னென்க.

(வி - ம்.) ஏறிவந்தருளேறு : பெயரெச்சத் தகரம் தொகுத்தல் விகாரம். அப்பால் - ஈண்டு இடப்பக்கம். மண்ணுதல் - கழுவுதல்.

(26)

 ஆய காலையில் விம்மி தம்பல வாக வாடறொ டங்கினான்
 பாய மேகலை யன்னை பார்ப்பதி பார்த்து நாதர்ப தந்தொழு
 தேயெ னும்முன மெண்ணி லற்புத மீண்ட வாடல்வி ளைத்திடும்
 சேயி வன்றிற மோது கென்னம கிழ்ந்து செப்புதன் மேயினான்.

(இ - ள்.) இங்ஙனமாய காலத்துப் பல விம்மிதமுளவாகத் திருவிளையாடலைத் தொடங்கினான். பரவிய மேகலையை யணிந்த தாயாராகிய மலைமகளார் இறைவன் பாதங்களை வணங்கி ஏயெனுமொலி யெழுவதற்கு முன்னம் இங்ஙனம் அளவிலவாகிய திருவிளையாடல்களைச் செய்யும் குழவியாகிய இவன் தன்மையினைத் திருவாய்மலர்ந்தருளுக வென்று வேண்டப் பெருமான் மகிழ்ச்சியுற்றுச் சொல்லுதலைச் செய்தார் என்க.

(வி - ம்.) விம்மிதம் - மருட்கை. பாய - பரவிய. ஏயெனுமுன் : விரைவுக் குறிப்பு. ஓதுக என்ன : தொகுத்தல் விகாரம்.

(27)

வேறு

 திகழுநம் விழியிற் றோன்றுஞ் சேயெனுங் குமரன் கங்கை
 அகமுற வடுத்த லாற்காங் கெயனகன் சரவ ணத்துத்
 தகவமர்ந் திருந்த வாற்றாற் சரவண பவன்வா னாரல்
 நகிலமிழ் தளிப்ப வுண்ட நலத்தினாற் கார்த்தி கேயன்.

(இ - ள்.) விளங்கா நின்ற நங் கண்ணினின்றுந் தோன்றிய சேயென்னுங் குமரன் கங்கையினகத்துப் பொருந்த வடுத்தலினாலே காங்கேயன் என்னுந் திருப்பெயரினை யடைவான். சரவணப்பொய்கையில் தகுதியாகத் தங்கியிருத்தலாற் சரவணபவ னென்னுந் திருப்பெயரினைப் பெறுவன். ஆகாயத்தில் இயலுகின்ற கார்த்திகைப்பெண்கள் பாலினையூட்ட உண்ட நன்மையாற் கார்த்திகேய னென்னுந் திருப் பெயரினைப் பெறுவான்.

(வி - ம்.) ஆரல் - கார்த்திகை மீன்கள். நகில் - முலை.

(28)