பக்கம் எண் :

646தணிகைப் புராணம்

 ஆறுமோ ருருவ தாக வாக்கலிற் கந்த னானான்
 ஆறுமா முகஞ்சீர்த் துள்ள நமக்கவை யவன்மு கங்கள்
 ஆறுமா யிருந்த வேத மறையுந்தா ரகவெ ழுத்தோர்
 ஆறுமாங் கவனா மத்தா றெழுத்துமா யிருந்த வன்றே.

(இ - ள்.) ஆறுருவங்களையு மோருருவாக்கலாற் கந்தனென்னுந் திருப்பெயரினைப் பெற்றான். நமக்குப் பெருமை பொருந்திய ஆறு முகங்களுள்ளன. அவைகளே அவன் ஆறுமுகங்களாகவுள்ளன. வேதஞ் சொல்கின்ற தாரக வெழுத் தாறும் அக்குமரன் றிருநாமத்து ஆறெழுத்துக்களுமா யிருந்தன வென்க.

(வி - ம்.) நமக்கு ஆறுமா முகங்களுள்ளன அவை அவன் முகங்களென முடிக்க. இருந்த : அன்சாரியை பெறாத பலவறிசொல். கந்தம் - சேர்க்கை.

(29)

 ஆங்கவ னமது சத்தி யாதலி னம்மைப் போல
 ஓங்குவன் சிறுவ னாவ னுலப்பில்பல் லுருவங் கொள்வன்
 நீங்குவன் பணிந்தோர் வேட்ட நிரப்புவ னடியா ரின்பம்
 தாங்கவீ டளிப்ப னன்னான் றன்மையா ரறிதற் பாலார்.

(இ - ள்.) அம்முருகன் நமது சத்தியாதலினானே நம்மைப்போல உயர்வான். சிறியவனுமாவன். கெடுதலில்லாத பல வடிவங்களுங் கொள்வான். (அங்ஙனம் வடிவங் கொள்ளுதலினின்றும்) நீங்குவான் வணங்கியோர் விருப்பத்தை நிரப்புவான். அடியார்கள் இன்பமடைய வீட்டுலகத்தினையுங் கொடுப்பான். அன்னவன் றன்மையை யாவர் அளவிட்டறியற் பாலார்.

(வி - ம்.) வேட்டம் - விருப்பம். நீங்கல் - உருவங் கொள்ளுதலினின்றும் நீங்கல்.

(30)

 வேதமுன் மொழியி னுண்மை வினாய்ச்சிறை புகுத வேதற்
 காதியெவ் வுலகு மாக்கிக் கருநிறத் தவுணர்ச் சாடும்
 மாதுநீ காண்டி யென்ன மகிழ்ந்தவண் மைந்த னாடும்
 தீதறு விளையாட் டின்கட் செலுத்திய மனத்த ளானாள்.

(இ - ள்.) வேதத்தின் முன்னருள்ள சொல்லாகிய பிரணவத்தின் உண்மைப் பொருளை வினாவிச் சிறையின்கட் செல்லப் பிரமனைவருத்தி எல்லா வுலகங்களையும் படைத்துக் கரியவுருவத்தோடுகூடிய அவுணர்களைக் கொல்வான், பெண்ணே! நீ காண்பாயாக வென்று திருவாய் மலர்ந்தருள மகிழ்வுற்று அவ்விடத்துக் குமரக் கடவுள் ஆடுகின்ற குற்றமற்ற திருவிளையாட்டின்கண் மனத்தைச்
செலுத்தினாள்.

(வி - ம்.) வேதமுன் மொழி - பிரணவம். சாடும் - கொல்வன். மாது : விளி. உண்மை - ஈண்டு உண்மைப் பொருண் மேனின்றது.

(31)