| சிலையினைக் கடலைத் தேஎத்தைச் செறிகதி யுயிர்க டம்மைத் | | தலைதடு மாறச் செய்த தன்மையை நோக்கி விண்ணோர் | | உலைவுறு மனத்த ராகி யுயர்வட கிரியை யண்மிக் | | கொலைபுரி வயிர வேலா னொடுங்குழீஇ யாய்ந்து நின்றார். |
(இ - ள்.) மலையினையுங் கடலினையும் நிலத்தினையும் மிகுந்த நாற்கதியுள் பிறக்கின்ற உயிர்களையும் முறைபிறழும்படி படைத்த தன்மையினைத் தேவர்கள் கண்டு நடுங்குகின்ற மனத்தையுடையராய்க் கொலைத் தொழிலைச் செய்கின்ற வயிரப்படையையுடைய இந்திரனோடு உயர்ந்த வடக்கின்கண்ணுள்ள கயிலைமலையை அணுகிக் குழுமி ஆராய்ந்து நின்றனர். (வி - ம்.) சிலை - மலை. தேம் - இடம். கதி - நாற்கதி - அவை : விலங்குகதி, தேவகதி, மக்கள்கதி, நரகர்கதி என்பனவாம். விண்ணோர் நோக்கி அடைந்து கூடிநின்று ஆய்ந்தனர் என்க. (32) | ஆவயிற் குழவி போற்சென் றடுக்கலைத் துளக்கி மீச்சூழ் | | தாவில்பல் குவடு விண்டு தரையிடை யுகுத்திட் டார்த்து | | மேவல னிவனே யென்ன வெய்யபோ ராடல் செய்த | | தேவரைக் கொன்று வீழ்த்துச் செங்களந் தமிய னின்றான். |
(இ - ள்.) பகைவன் இவனேயாகு மென்று கொடிய வலிய போரைச் செய்த தேவர்களை அவ்விடத்துக் குழவிபோலச் சென்று மலைகளையசைத்து அம்மலைகளின்மீது பொருந்திய கெடுதலில்லாத பல கொடுமுடிகளைப் பிளந்து பூமியின்கண்ணே சிந்தி வீரமுழக்கஞ் செய்து கொன்று கீழேதள்ளிப் போர்க்களத்தின்கண் தனியாக நின்றனன். (வி - ம்.) விண்டு - பிளந்து. இது செய்வதன் றொழிற்கும் செய்விப்பதன் றொழிற்கும் பொது. இதனை "கொடுங் கால் குலவரை விண்டு" என்னுந் திருக்கோவை அடியின் உரையான் உணர்க. செங்களம் - போர்க்களம். இதனைச் "செங்களம் படக்கொன்று" என்னுங் குறுந்தொகை யடியானுணர்க. (33) | பொன்பெய ரமரன் றாழ்ந்து போற்றலு மெழுப்பி யன்னோர் | | இன்புற வுலக மெல்லா மிலங்குபே ருருவந் தோற்றித் | | தென்பொலி தேவ சேனா பதியெனத் திகழ்பேர் தாங்கி | | மின்பொலி கந்த வெற்பின் விண்ணவர் பூசை கொண்டு. |
(இ - ள்.) இங்ஙனம் முருகப்பெருமான் தனியாகநின்ற காலத்துத் தேவ குரவனாகிய வியாழப்புத்தேள் வணங்கித் துதிக்க (முருகப்பெருமான் இறந்துபட்ட தேவர்களை) உயிர்த்தெழச் செய்து அத்தேவர்கள் இன்பினையடைய எல்லா வுலகின்கண்ணும் இலங்காநின்ற தனது பெரிய வடிவத்தினைத் தோற்றுவித்து அழகு விளங்குகின்ற அமரர் படைத்தலைவனெனக் கண்டோர்கூற விளங்காநின்ற சிறப்புப் பெயரினைப் பூண்டு ஒளிவிளங்குகின்ற கந்தமலையின்கண் தேவர்கள் செய்த வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு. |