பக்கம் எண் :

648தணிகைப் புராணம்

(வி - ம்.) பொன்பெயரமரன் - வியாழப் புத்தேள். பேருருவம் - பெரியவடிவம். இதனை வடநூலார் விச்சுவரூப மென்பர். தென் - அழகு.

(34)

 நாரதன் வேள்வி வந்த நாமவான் றகரை யூர்ந்து
 வீரரோ டமரு நாளில் வேதனைச் சிறைவைத் தெண்டோள்
 ஆரியன் முதலி னோர்கட் காரிய னாகி நோற்ற
 வாரணி முலையி னார்க்கு மணாளனாம் வரமு முய்த்தான்.

(இ - ள்.) நாரத முனிவன் இயற்றிய வேள்வியின்கட் டோன்றிய உலகினுக்கு அச்சத்தைத் தருகின்ற பெரிய ஆட்டுக்கிடாயினை ஊர்தியாகக் கொண்டு செலுத்தி இலக்கத் தொன்பதின்மராகிய வீரர்களோடு வைகியநாளின்கண் (தான் வினாய வினாக்களுக்கு விடையிறுக்காத) பிரமனைச் சிறைப்படுத்தி எண்டோளினையுடைய பரமாசாரியனாகிய சிவபெருமான் முதலிய தலைவர்கட்கும் பரமாசாரியனாகித் தன்னை மணாளனாம்படி தவத்தினைச் செய்த கச்சினையணிந்த தனங்களையுடைய அமுதவல்லி சுந்தரி யென்கின்ற பெண்களுக்கு மணமகனாகும் வரத்தையுங் கொடுத்தான்.

(வி - ம்.) தகர் - ஆட்டுக்கிடாய். அமுதவல்லி - சுந்தரி. இவர் திருமாலின் புதல்விகள் இவர் பின்னர் தெய்வயானை யென்னும் பெயரும் வள்ளி யென்னும் பெயரும்பெற்று முருகக்கடவுளை மணந்தனர்.

(35)

 இன்னன நிகழ்ந்த பின்றை யெம்பிரா னுமைக்கு நாப்பண்
 மன்னிவீற் றிருக்கு மேல்வை மான்முத லிமையோர் வேண்ட
 முன்னவன் கருணை கூர்ந்து மொய்யெறுழ்ப் பூத வெள்ளம்
 தன்னையு மளித்துப் போக்கத் தாழ்ந்தனன் விடைகொண் டானால்.

(இ - ள்.) இத்தன்மையனவாகிய செயல்கள் நிகழ்ந்த பின்றை எம்மிறைவனாகிய சிவனுக்கும் உமையம்மையாருக்கும் நடுவட்பொருந்தி வேறொருவர்க்கும் இல்லாத சிறப்புடன் எழுந்தருளியிருக்கு ஞான்று திருமான் முதலாய தேவர்கள் வேண்டுகோட் கிணங்கி (முன்னைப்பழம் பொருட்கு முன்னவனாகிய இறைவன்) கருணைமிகுந்து மிக்க வலியினையுடைய வெள்ளமென்னும் அளவினையுடைய பூதக் கூட்டங்களையுங் கொடுத்துச் செலுத்த (முருகப்பெருமான்) வணங்கி விடைகொண்டனனென்க.

(வி - ம்.) ஏல்வையின் வேண்டவளித்துப்போக்க விடைகொண்டனன் முருகன் என வினைமுடிவு செய்க.

(36)

வேறு

 இரண்டா யிரவெள் ளமெனும் படையும்
 திரண்டார் தருதே வருமொன் பதின்மர்
 முரண்டா வுமிலக் கருமுற் றுமரீஇ
 அரண்டா னெனும்வை யமடுத் தனனே.

(இ - ள்.) இரண்டாயிரம் வெள்ளம் என்னும் அளவினையுடைய படைகளும் தொக்குப் பொருந்திய தேவர்களும் வீரவாகுவை முதலாகக்கொண்ட