பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்65

வல்லமையால் உடலின்கண் நிறைந்த உரோமங்களையெல்லாம் தேவர்கட்கிறைவனாகிய இந்திரன் உள்ளம் நடுங்கும் வண்ணம் கூர்மை பொருந்திய வயிர ஈட்டியாக்கித் தேவருலகத்தைத் துளைத்து வருத்த நீள்விக்கும் உயர்ச்சியை
யொக்கும்.

(வி - ம்.) அவுணன் பெற்று ஆக்கிஅட நெடுகு மூக்கமானுமென முடிக்க. களபம் - யானைக்கன்று. கவவு - அகத்திடுதல். "கவவகத்திடுதல்" என்னும் தொல்காப்பியச்சூத்திரத்தா னறிக. எண்ணில் தலம் - அளவிறந்த திருப்பதிகள், பொதிர்ந்து - துளைத்து, நெடுகும் - நீள்விக்கும், ஊக்கம் - உயர்ச்சி. புவிமுழுதும் அவுணனாதல் இராமாயணத்திற் காண்க. இஃது உவமையணி.

(116)

 உடன்முழுதும் பலயோனி தழுவி யெண்ணி
           லொண்டொடியா ரோருருக்கொண் டிருந்தா லன்ன
 அடர்பசும்பொ னுலகிறைவன் செய்தி கேளா
           வறியாது போர்முயன்றா மந்தோ வென்று
 தடவுமனத் தெழுஞ்சமழ்ப்பா லொளிவே றாயத்
           தனிப்படைக டலையிறங்குந் தன்மை போலும்
 மடல்கிழித்து விசும்பெழுந்த கதிர்க ளெல்லா
           மரகதத்தி னொளிதழைத்து வணங்குந் தோற்றம்.

(இ - ள்.) இதழைக் கிழித்து ஆகாயத்தினெழுந்த நெற்கதிர்களெல்லாம் மரகத மணியினொளிபோலும் பச்சொளி தழைக்கப் பெற்று (தலை) வணங்கும் காட்சியானது. அங்கமுற்றிலும் பல பெண் குறிகளைப் பொருந்தி அளவிட ஒண்ணாத ஒள்ளிய வளையலையணிந்த மாதர் ஒரு வடிவங் கொண்டிருந்தது போன்ற தோற்றத்தையுடைய நெருங்கிய பசும் பொன்னுலகத்திறைவனாகிய இந்திரன் செய்தியைக் கேட்டு (இவ்விறைவன் நிலைமை) அறியாது போரைத் தொடங்கினோம். ஐயோ வென்று கூறி மாறுபட்ட மனத்தின்கண் உண்டாகின்ற நாணத்தால் நிறம்வேறாகி (மேற்கூறிய) ஒப்பற்ற ஈட்டிப்படைகள் தலையை வணங்குகின்ற தன்மையை யொக்கும்.

(வி - ம்.) மடல் - நெற்பயிரின் தோடு. அன்ன இறைவனெனக் கூட்டுக. தடவு - மாறுபட்ட. "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" என்னும் தொல்காப்பியச்சூத்திரத்தா னறிக. சமழ்ப்பு - நாணம். "சான்றோர் சமழ்த்தன்ன" என்னும் நாலடியானுணர்க. படை - மேற்கூறிய ஈட்டி. நிறம்வேறாதல் - மேற்கூறிய வெள்ளொளி போய்ப் பச்சொளியாதல். கதிர் வெண்மையாத் தோன்றிப்பின்
பச்சொளி யாதலை.

 "ஈன்றெடுத்தோர் குணமகவுக் கியையுமுறைப் படிவித்திற்
           றோன்றுமுளை முன்விளர்த்துப் பின்பசந்த தொடர்பினால்
           ஆன்றசெழுங் கதிர்களுமுன் தூவெள்ளை யாயெழுந்து,
           மான்றுமர கதமேனி வாய்த்துமடல் கிழித்தெழுமால்"

எனும் காஞ்சிப்புராணச் செய்யுளானறிக. இஃது உவமையணி.

(117)