பக்கம் எண் :

66தணிகைப் புராணம்

 மன்னுசிவஞ் சதாசிவனென் றுடலம் வெண்மை
           வாய்ந்தீச னெனநீல வுருவம் பூண்டு
 பின்னரர னெனச்சிவந்த வடிவந் தாங்கும்
           பெற்றிமைபோல் வித்துமுளை வெண்மை யாகி
 நன்னர்மர கதவொளியின் பயிரா யோங்கி
           நயந்ததற்பின் செம்பொனிற வயக்க மாண்ட
 கொன்னும்விளை வாய்ப்பழுத்து நாளுந் தாழ்ந்த
           குழவிபயந் தவர்மணிப்பூண் கொங்கை யென்ன.

(இ - ள்.) எஞ்ஞான்றும் நிலைபெற்ற சுத்த சிவம் (அனுக்கிரகம் செய்யுங்கால்) சதாசிவனென்று சொல்லப்பெற்று உடல் வெண்மை நிறம் வாய்க்கப்பெற்று (திரோபவம் செய்யுங்கால்) மகேசனெனும் பெயரைப் பெற்று, நீல வடிவத்தை மேற்கொண்டு (சங்காரம் செய்யுங்கால்) அரனென்று சொல்லப்பெற்றுச் சிவந்த வடிவத்தை மேற்கொள்ளும் தன்மைபோல விதையிலுண்டாகு முளை வெண்ணிறமுடையனவாகி நல்ல மரகத இரத்தினத்தின் ஒளிபோலப் பயிராக ஓங்கி நன்மையைத் தந்து கதிர்கான்ற பின்னர் செம்பொன்னின் நிறம் போன்ற (ஒளியின்) விளக்கத்தால் மாண்புற்றன. மகவையீன்ற மகளிர், இரத்தினங்களழுத்திய ஆபரணமணிந்த தனங்களென்று சொல்லும் வண்ணம் பெருமை பொருந்திய விளைவுடைத்தாகிப் பழுத்து நாளும் தலைவணங்கினவாம்.

(வி - ம்.) சிவம், எழுவாய், வித்து, எழுவாய். மாண்ட - மாட்சி மையடைந்தன. முற்று. கொன் - பெருமை. வயக்கம் - விளக்கம். தாழ்ந்த - தலைவணங்கின. முற்று. வித்துமுளை மாண்டன தாழ்ந்தன என முடிக்க. இந்நூல் அகத்தியப்படலம் 437-ஆம் செய்யுளில் "தவளநிறம் கனகநிறம் சிந்தூர நீலம்" தனுவிதய தேவர்முதல் நால்வர்க்கும் என்னும் பகுதியானறிக.

(118)

 பரவுசிவ ஞானமுண ரடியார் செங்கைப்
           படுத்தபொருள் பெரும்பயனைப் பயக்கு மாபோல்
 விரவுமுழ வர்களளித்த சிலகொண் டாற்ற
           வியன்பணைகள் பெரும்பயனா விளைத்த சாலி
 மரகதமெல் லுருத்தணந்து கவுர மேனி
           வயங்கியறம் பற்பலவும் வளர்க்கு மாற்றால்
 இரவு1 வளங் கதிர்ச்சடிலக் குழகன் பாங்க
           ரிருந்தருளு முமைமாதும் புரையு மன்றே.

(இ - ள்.) யாவரும் துதிக்கின்ற சிவஞானத்தை யுணர்ந்த அடியார்கள் செவ்விய கரங்களிற் பெய்த (தானப்) பொருள் (வீடு பேறு முதலிய) பெரிய பயனைக் கொடுக்குமாறுபோல, பெரிய வயல்கள், கலந்த உழவர்கள் (தம்பால் வித்திய) சில வித்தை யேற்றுக்கொண்டு

 1. வளர்கதிரென்றும(பா - ம்.).