பக்கம் எண் :

652தணிகைப் புராணம்

(இ - ள்.) கடலும் நிலனும் விளக்கமுடைய செங்கதிர்க் கடவுளும் தண்கதிர் மதியமும் பொன்னுலகமும் தம்பதம் நழுவி நிலைகுலைந்து செல்ல வேறொரு கடலானது எழுச்சியுற்று வடவைத் தீயோடு நெறிக்கட் சென்றதெனக் கூறும்வண்ணம் பூதர்கணடுவன் தேர்விரைந்து சென்ற தென்க.

(வி - ம்.) கதிர் : செங்கதிர் மண்டிலத்தினையும் தண்கதிர் மதியத்தினையு முணர்த்தலான் ஆகுபெயர். படர்தல் - நடத்தல். இதனைப் "படர்நடை நினைப்பு நோவாம்" என்னும் நிகண்டா னறிக. வடவா முகத்தின் : வேற்றுமை மயக்கம். பூதரைக் கடலாகவும் தேரை வடவைத் தீயாகவுங் கொள்க.

(46)

வேறு

 தங்குலத் தரசற் றபுமார் செலும்
 இங்கி வர்க்கிடை யூறுசெய் வாமென
 அங்கண் மாநில னாமவு ணன்புரி
 பொங்கு மாயையிற் போர்த்தது தூளியே.

(இ - ள்.) கண்ணகன் புவியாங் கடுங்கொலை யவுணனாகிய மேதையென்பவன் தங்குலத்திறைவனாகிய சூரனைக் கோறல் செய்யும் பொருட்டுச் செல்லும் முருகன் முதலியோர்க்கு இஞ்ஞான்று இடையூற்றினைச் செய்வா மென்றுள்ளி மிக்க தனது மாயையான் வன்மையினாற்றூளி வடிவாய்ச் சென்று போர்த்ததுபோலத் தூளிவானினை மூடிய தென்க.

(வி - ம்.) அவுணன் - மேதை யென்பவன். இதனைக் "கண்ணகன் புவிமுழுது மாங்கடுங் கொலையவுணன்" என்னுங் காஞ்சிபுராணத்தான் அறிக. அரசன் - ஈண்டுச் சூரன். இன் - ஐந்தாவதன் ஒப்புப் பொருள்.

(47)

 ஞான நாயக னல்லருட் பார்வையின்
 ஆன மாயைய கன்றது போன்மென
 வானு ளார்நனி தூவுதண் மாமலர்த்
 தேனை மாரியிற் றீர்ந்தது தூளியே.

(இ - ள்.) அறிவைத் திருவுருவாகக் கொண்ட முருகப்பெருமானது நல்லருணோக்கத்தால் (சூரன் முதலாகியோரால்) உளதாகிய மாயையானது நீங்கியதுபோலும் என்று சொல்லும் வண்ணம் வானுலகின் கண்ணுள்ளார் (முருகன்மேல்) மிக்குத் தூவுகின்ற தேனோடுகூடிய மலர் மழையினாலே தூளிநீங்கிய தென்க.

(வி - ம்.) இனி - பரமாசிரியனது நல்லருட் பார்வையினாலே (மாணாக்கருக்குளவாகிய) அஞ்ஞானம் நீங்கியதுபோல' எனவுமாம். தேனைமாரி : ஐ, சாரியை. போன்ம் : மகரக் குறுக்கம்.

(48)

 முத்தி னூர்தியும் பிச்சமு மொய்குடைக்
 கொத்தும் வார்கொடி யுங்குளிர் பாரெலாம்
 பொத்தி நின்றன பூண்கொடுங் கோலழல்
 மெத்தி நின்ற மெலிவுதி றம்பவே.