(இ - ள்.) உலகின்கண் நிறைந்துநின்ற சூரன் கொடுங்கோலாகிய அழன் நிறைந்து நின்றதனாலுளவாகிய வாட்ட மாறும்வண்ணம் முத்துச் சிவிகையும் பீலிக்குடையும்செறிந்த ஏனைக்குடைக் கூட்டங்களும் நீண்ட துகிற்கொடிகளும் உலகெலாங் குளிரும்வண்ணம் மூடி நின்றன வென்க. (வி - ம்.) பிச்சம் - பீலிக்குடை. 'பிச்சமாண் மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும்' என்னும் நிகண்டானறிக. மெத்தல் - நிறைதல். திறம்பல் - மாறல். கொத்து - கூட்டம். (49) | இன்ன வாறிய வைக்க ணியங்குபு | | பன்ன ருங்கிர வுஞ்சப் பறம்பயல் | | துன்ன லுஞ்சுரர் யாருந் துளங்கினார் | | நன்னர் நாரத னாயகற் கோதினான். |
(இ - ள்.) மேற் கூறியாங்கு நெறிக்கட் செல்லுங்கால் கூறுதற்கரிய கொடும்பாட்டினையடைய கிரவுஞ்சமென்னு மலையின் பக்கலிற் சேறலுந் தேவர்கள் யாவரும் நடுக்குற்றனர். (உலகினுக்கு நன்மையைப் புரிகின்ற) நாரதமுனிவன் சேனைத்தலைவனாகிய முருகப்பெருமானுக்குச் சொன்னான். (வி - ம்.) இயவை - வழி. பறம்பு - மலை. நன்னர் - நன்மை. நாயகன் - ஈண்டு படைத்தலைவனாகிய முருகன். (50) | பட்டி மைக்கிரி யீதுபன் மாதவர் | | அட்ட தீங்கொரு பாலணி மாநகர் | | இட்டு வல்லவு ணற்கிளை யோனுளன் | | விட்ட மால்படை மின்னிய மார்பினான். |
(இ - ள்.) வஞ்சத் தன்மையுடைய மலை யிதுவாகும். இதனொரு பக்கலில் திருமால் போக்கிய சக்கரப்படை (மாலையாகக் கிடக்கப் பெற்று) விளங்குகின்ற மார்பினை யுடையவனும், சூரனுக்கிளையோனுமாகிய தாரக னென்பான் பல தவத்தினரையுங் கொன்ற தீமைகளை யெல்லாந் திரட்டி அழகிய நகரமாகச் செய்து அதன்கண்ணுள்ளா னென்க. (வி - ம்.) பட்டிமை - வஞ்சகத்தன்மை. இடுதல் - ஈண்டு ஆக்கலின் மேற்று. திருமால் தாரகன் மேலேவிய சக்கரப்படை மீளாதவன் மார்பிற் கிடந்தழகு செய்தலின், விட்டமால் படை மின்னிய மார்பினனென்றார். (51) | இன்ன தானவ னின்னுயி ருண்டலால் | | அன்ன தானவ னாருயிர்க் கேகலை | | அன்னை தந்தை யழற்கணெ னத்தகும் | | மன்ன வென்றுயர் மாதவன் கூறலும். |
|