பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்661

(இ - ள்.) கச்சினைக்கட்டிய இடையாரும் வீரக்கழல் பொருந்திய காலினையுடையாரும் மாற்றார் வெய்தாக் கொல்லுகின்ற படைக்கலங்கள் யாவையுங் கெடுக்கின்ற தோள்வலி யுடையாரும் பதினான்குலகமும் அஞ்சியடங்கப் போரியற்றும் தருக்கினை யுடையாருமாகிய நொச்சிப் பூவினையணிந்த படையாளர் வேகத்தோடு மதிலை முற்றிய பூதர்களோடு பொருதா ரென்க.

(வி - ம்.) கழலிரண்டுள் முன்னையது வீரத்தைப் பொறித்திடு மணிவடம். இதனை "ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்" என்னும் பதிற்றுப்பத்து அடியானு முரையானு முணர்க. பின்னையது கால். வெச்சு - வெப்பம். மிளிர்தல் - கெடுத்தல். மிகை - தருக்கு. இதனை "மிகுதியான் மிக்கவை செய்தாரை" என்னும் குறளடியானு முரையானு முணர்க. நொறில் - வேகம். வெய்யரில் வேற்றுமை மயக்கம். திணை - உழிஞை. துறை - அன்றிமுற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி. நொச்சி - காத்தல்.

(68)

 கணிப்பில்பல நாளுங்கஞல் கண்டூதியை முற்றும்
 மணிப்பொற்புய மொருவுற்றொளி மல்கப்புகு மிந்நாள்
 தணிப்பில்புகழ் பேரூழிக டறுகட்கரி வதனத்
 தணிப்பொன்முடி யிழையோடுத ழைக்கென்றமர் செய்தார்.

(இ - ள்.) அளவிட முடியாத பலநாள்களினும் செறிந்த தினவைத் தோளுக்குரிய இலக்கணங்களெல்லாம் முற்றுப்பெற்ற அழகிய பொன்போன்ற நிறத்தினையுடைய தோள்கள் நீங்கி ஒளிநிறையப் போர்க்குச் செல்லு மிக்காலத்துளவாகிய கேடில்லாத புகழ்பெரிய வூழிக்காலம் வரை அஞ்சாமையுடைய யானை முகத்தையுடைய அழகிய பொன்னாற் செய்த முடியையுடைய தலைவனாகிய தாரகனோடு தழைக்கக் கடவது என்று கூறிப் போரினைச் செய்தா ரென்க.

(வி - ம்.) கணித்தல் - அளவிடுதல். கண்டூதி - தினவு. இது நீண்டகாலம் போரின்மையா லுளவாகுமொரு வகை எழுச்சி. கஞலல் - செறிதல்.

(69)

 சிலையோடெதிர் சிலையுஞ்செறி வாளோடுவை வாளும்
 இலைவாரயில் வேலோடிலை வேலுஞ்சுள குறழ்கா
 தலைதோலொடு தோலும்பரி யோடன்னது மிரத
 மலையோடுருண் மலையும்பொரு மறவெங்கனல் சிதறி.

(இ - ள்.) கோபத்தால் நெருப்பைக் கக்கி வில்லினெதிரே வில்லும் செறிந்த வாளினெதிரே கூரியவாளும் போரிற்குரிய வேலெதிர் இலை வடிவினையுடைய வேலும் முறத்தினை யொத்த செவியினையுடைய யானையினெதிர் யானையும் குதிரையினெதிர் குதிரையும் தேராகிய மலையினெதிர் உருளுகின்ற மலையாகிய தேரும் போர்செய்யு மென்க.

(வி - ம்.) எதிர் என்ற சொல்லை யாண்டுங் கூட்டுக. தோல் - யானை. சிதறிப்பொரும் என வினைமுடிவு செய்க.

(70)