பக்கம் எண் :

666தணிகைப் புராணம்

விட்டனன்.

(வி - ம்.) திறலினான் - வீரவாகு. ஒன்றும் - சிறிதும். மருட்கை - ஒருவகை மெய்ப்பாடு. ஐ - அழகு. அதனை - மாயை செய்யும் பாணத்தை.

(81)

 அங்க ணப்படைய வன்வடிவ னந்த மொடுசென்
 றெங்கு நின்றுபொர வீரரிமை யாரி னைவுற
 மங்கும் வல்லவுணர் துள்ளவது கண்டு மனிதச்
 சிங்கம் வென்றபடை செம்மல்கையெ டுத்த னனரோ.

(இ - ள்.) அவ்விடத்து அவ்வஞ்சனை செய்யும் வாளி தாரகன் வடிவம் பலகொண்டு சென்று எவ்விடங்களிலும் நின்று போரினைச் செய்ய வீரர்கள் கண்ணிமையாராகி வருந்தக் கெடுந்தன்மையுடைய வலிய அவுணர்கள் துள்ளிக்குதிக்க, அங்ஙன மோகையாற் றுள்ளுவதனைக் கண்டு வீரவாகுதேவர் நரசிங்கத்தை வென்ற சிம்புட்படையினைக் கையின்கண் எடுத்தன ரென்க.

(வி - ம்.) செம்மல் - ஈண்டு வீரவாகு, மனிதச்சிங்கம் வென்ற படை - சிம்புட்படை.

(82)

 சிம்புள் வெம்படையை நோக்கிவிளை மாயை சிதற
 உம்பன் மாமுகவன் கைதவமு ஞற்ற விரிய
 நம்பி தேர்கிலன லத்தபடை தூணி நிறுவி
 இம்ப ரோடினன்பி டித்துவர வெண்ணி விரைவின்.

(இ - ள்.) கொடிய சிம்புட்படையைக் கண்டு மாயவாளிகள் உளவாக்கிய வஞ்சனைகள் நீங்க, தாரகன் வஞ்சனையைச் செய்ய வெந்நிட்டோட ஆடவரிற் சிறந்த வீரவாகுவென்பான் (தாரகன்) வஞ்சனையை ஆராய்ச்சியிலனாய்த் தனக்கு நன்மையைத் தருகின்ற படைகளை அம்பறாக் கூட்டின்கட் டங்கச்செய்து விரைவிற் பிடித்துக்கொண்டுவர நினைத்து அவன் பின்னரோடின னென்க.

(வி - ம்.) உம்பல் - யானை. கைதவம் - வஞ்சனை. இம்பர் - ஈண்டுப் பின்னர் என்னும் இடத்தினை யுணர்த்திற்று. தூணி - அம்பறாக் கூடு.

(83)

வேறு

 குறுமுனி விளைத்த சாபக் குருகுசுட் டியபே ரோங்கல்
 இறுவரை முழையொன் றண்மி யிபமுக னிறந்து தோற்றான்
 கறுவொடு தொடர்ந்து போந்த காளையுட் சேற லோடும்
 பெறுமுணர் வழியக் குன்றம் பேதுசெய் திட்ட தன்றே.

(இ - ள்.) அகத்தியன் இட்ட சாபத்தினால் கிரவுஞ்ச மென்னும் பறவையின் பெயரினைப்பெற்ற கெடுதற் கேதுவாகிய மலையின்கண்ணுள்ள ஒரு குகையின்கட் சென்று தாரகன் ஒளித்தனன். சீற்றத்தோடு பின்பற்றிச் சென்ற வீரவாகு அக்குகையுட் சேர இயல்பாகத் தான் பெற்றிருந்த அறிவுகெட அக்குன்றம் மயக்கஞ் செய்தது.