பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்671

 கால்பொரக் கனிந்து நைந்த கனித்திர ளுகுவ தென்ன
 மால்பொர னோக்கித் தன்னை மதியகத் திழிக்கும் பூதர்
 கோல்பொர லவுணர் சென்னி குருமுடி யோடும் வீழச்
 சால்பொரு வுற்றுத் தீயோர் தலைவர்க ளுடைந்து போந்தார்.

(இ - ள்.) காற்றானது மோத முதிர்ந்து நைவுற்ற கனிக் கூட்டங்கள் சிந்துவதை யொப்பத் திருமாலால் பூதவீரர்கள் போர் செய்தலை நோக்கித் தம்மை மனத்தின்கணிழித்தற் கேதுவாகிய பூதர்கள் பாணங்கள் பொருதலால் அவுணர்கள் தலைகள் நிறத்தோடுகூடிய முடிகளுடன் வீழப் போரில் அமைதித் தன்மை நீங்கிப் படைத்தலைவர்கள் வெந்நிட்டுச் சென்றன ரென்க.

(வி - ம்.) கால் - காற்று. அவுணர்களோடு பல்காலும் போர் செய்து ஆழிப்படையையும் இழந்த விண்டுவானவன் பூதர்கள் அவுணரோடு போர் செய்தலைக் கண்டு "நமக்கு இத்துணை யாற்றலில்லையே" எனத் தம்மைத் தாம் இழித்துக் கூறலின், மால்பொர நோக்கித் தம் மதியகத்திழிக்கும் பூதர் என்றார்" போரிலமைதித் தன்மை.

(93)

 உடைதல்கண் டார்த்த பூத ரோகையுந் தன்பாற் றோல்வி
 அடைதலு நோக்கி வல்லே யந்தநா ளங்கி யென்னத்
 தடைஇய சிலைகை வாங்கிச் சரமழை தூர்த்துப் பூதர்
 மிடைதரு தலைவர் தம்மை விழிக்குமு னிரித்துச் சென்றான்.

(இ - ள்.) தோல்வி யுறுதலைக் கண்டு வீரமுழக்கஞ் செய்யும் பூதப் படையின் மனக்களிப்பையும் தம் பக்கலில் தோல்வியுறுதலைக் கண்டு விரைவில் ஊழிக்காலத்துத் தோன்றும் நெருப்பென வளைந்த வில்லினைக் கையிலெடுத்து அம்பு மழையைச் சிந்திப் பூதப்படையிற் பொருந்திய தலைவர்களை இமைக்கு முன்னர்க்கெடுத்துச் சென்றான் என்க.

(வி - ம்.) தடைஇய - வளைந்த. இதனை, "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. அந்தநாளங்கி - முடிவுகாலத்துளதாந் தீ.

(94)

 பண்டைநற் றவத்தி னாற்றாற் பாயொளி முகமோ ராறும்
 குண்டலங் குலாய காதுங் கொழும்படைக் கரமீ ராறும்
 தண்டைகிண் கிணிகள் சூழ்ந்த தாள்களும் பொலியத் தேரின்
 அண்டர்கள் சூழ நின்ற வமலனை யெதிரே கண்டான்.

(இ - ள்.) முன்னரியற்றிய நற்றவப் பயனால் பரவிய ஒளியையுடைய அறுமுகமும், குண்டலங்கள் பொருந்திய திருச்செவியும், நல்ல படைக்கலங்களை யுடைய பன்னிரு திருக்கரங்களும், தண்டையும், சதங்கையும் பொருந்திய திருவடிகளும், விளக்கமுறத் தேரின்கண் தேவர்கள் சூழநின்ற மலமற்றவனாகிய இளையோனை எதிரே கண்டன னென்க.

(95)