பக்கம் எண் :

674தணிகைப் புராணம்

(வி - ம்.) திருமாலினை உடுவாகவும், தாரகனை வெண்கதிர்க் கடவுளாகவும், முருகனைச் செங்கதிர்க் கடவுளாகவுங் கொள்க, ஐயன் - ஈண்டுச் சூரன். ஏகாரம் எதிர்மறை. முருகனே! நீ இளையையாதலின் படைக்கலப் பயிற்சியில் தேர்ச்சியுற்றிலை யாதலின் உன் படையையுங் கவர்வே னென்பான், மாயனார் திகிரியீது மார்பிடைக் காண்டி யென்று கூறியதற்கு முருகப்பெருமான் விடையாக பேதையே! எல்லா அண்டங்களையும் அடும்வேல் "நும் வயத்தாமே" என விடை கூறினானென்க.

(101)

 பொய்தகு வரையும் புக்கெக் கழுத்தத்திற் புகலு நீயும்
 செய்தவ ரிடும்பைக் குன்றுந் திகழ்ந்திடு நும்மார் தேசும்
 வெய்திவ ணழியக் காண்டும் வாயினால் விளம்ப லென்னாம்
 கைதனில் விளம்ப லன்றே வீரர்தங் கடப்பா டென்றான்.

(இ - ள்.) பொய்ம்மையினையே தகுதிக் குணமாக வாய்க்கப்பெற்ற கிரவுஞ்சமலையும் என்பால் வந்து இறுமாப்போடு தன் மேம்பாட்டுரை கூறும் நீயும் செய்கின்ற தவத்தினையுடைய முனிவர்க ளடைகின்ற துன்பமாகிய மலையும், விளங்குகின்ற நும்மவர்கள் செல்வமும், விரைவிலழியச் செய்வோம். வாயினாற் கூறலாலென்பயன் கையாற் கூறுதலன்றோ வீரர்கள் முறையென்றான்.

(வி - ம்.) எக்கழுத்தம் - இறுமாப்பு. தலையெடுப் பெனவுங் கூறுவர். நும்மார் - நும்மவர். தேசு - ஈண்டுச் செல்வம். காரியத்தைக் காரணமாகக் கோடும் உபசார வழக்கு. கையினால் விளம்பல் இலக்கணை. கடப்பாடு - முறை. "கைம்மாறு வேண்டா கடப்பாடு" என்னுந் திருக்குற ளுரையா னுணர்க. வெய்து - விரைவு.

(102)

 இன்னண மிறைவன் கூற விபமுகன் மானமுந்தப்
 பொன்னிவர் தோளை நோக்கிப் பொருசிலை நோக்கிக் கையால்
 மன்னிய முகத்து ரோமம் வருடினன் றிரித்துக் கொண்டு
 தன்னெடுஞ் சிலையைக் கோட்டி நாணினைத் தழக்கங் கண்டான்.

(இ - ள்.) இங்ஙனமாக இறைவனாகிய முருகன் சொல்லத் தாரகன் மானஞ் செலுத்த வீரத் திருவும் விரும்புகின்ற தன்தோளினை நோக்கிப் போர்க்குரிய வில்லினையும் நோக்கிக் கைகளான் முகத்திற் பொருந்திய உரோமங்களைத் தடவிக்கொண்டு தனது நெடிய வில்லை வளைத்து, நாணினை, முழங்கும் வண்ணம் விரலாற் றெறித்தான்.

(வி - ம்.) பொன் - வீரத்திரு. முகத்து ரோமம் - மீசை. தழக்கம் - முழக்கம்.

(103)

 வன்றிற லிளையோன் றானும் வார்சிலை வரங்கி நாணில்
 துன்றொலி யெழுப்பி விட்டான் றுளங்கின வண்ட மெல்லாம்
 வென்றில மேனும் போரின் விளிகுவ மேனும் வென்றி
 இன்றுள மென்று தீயோ னெரிகணை தெரிந்து கொண்டான்.