பக்கம் எண் :

678தணிகைப் புராணம்

 புராரித ரும்படை போக்கின னார்த்தது போதவு ளத்திறையைப்
 பராவிய கங்கையி னேற்றலு நொந்துப றைந்தன நந்திருவென்
 றுராவும னத்தினன் மாயைவ லானிவ னொய்யென வாற்றியது
 விராவுவல் வெற்றியெ னக்கிர வுஞ்சவி லங்கலொ டும்வருவான்.

(இ - ள்.) திரிபுரத்தை யெரித்த இறைவன் தனக்குத்தந்த பாசுபத மென்னும் படையைச் செலுத்தினான், முழங்கி அப்படை வர முருகன் தன் தந்தையை உள்ளத்தின்கட் குறித்து அழகிய கையாற்றாங்க (அதனைக் கண்ட தாரகன்) வருந்தி நமது செல்வம் இன்றோ டொழிந்த தென்று நிலை பெயர்ந்த மனத்தினையுடையவனாகிய தாரகன் இம்முருகன் மாயையில் வல்லமையில்லாதவனாகையால் அம்மாயை விரைவிற்செய்து வென்றியொடு பொருந்திக் கலப்பேனென்று கிரவுஞ்சம் என்னும் மலையோடு வருவா னென்க.

(வி - ம்.) புராரி தரும்படை - பாசுபதப்படை. பறைதல் - நீங்கல். உராவுதல் - நிலைபெயரல். வலான் - வல்லமை யில்லான். அது - அம்மாயை. விராவுதல் - கலத்தல்.

(112)

 முப்புர மெண்ணில வாகவி லங்கன்மு னைத்தெழு சூரிளவல்
 அப்புர வாழ்நர்க ளாயொரு சார்வரு மாழிக ளாகவரை
 துப்பின னார்வட வைக்கன லாம்புன றூங்குமு கிற்படலம்
 மைப்படி நீள்சிலை யாகவி டிக்குல மாமுக னாய்வருவான்.

(இ - ள்.) கிரவுஞ்சமலை அளவில்லனவாகிய முப்புரங்களாகப் போர்க்கு விரைந்தெழுகின்ற சூரனிளவலாகிய தாரகன் அப்புரத்தின் கண் வாழ்கின்றவராக ஒரு பக்கத்து வருவான் அம்மலை கடல்களாக வலியையுடையனாகிய அவன் அக்கடலின்கண்ணுள்ள வடவைத் தீயாகி வருவான் மேகந்தங்கும் அம்மலை நீர்தங்கு முகிற்கூட்டமாக அத்தாரகன் அம்முகிற் படலத்துட் டோன்றும் இடிக்கூட்டமாகி வருவான்.

(வி - ம்.) தூங்கும் - தங்கும். மை - மேகம். சிலை - மலை.

(113)

 நேமிவ ரைப்புடை சூழிரு ளாகநெ டுங்கிரி யாங்குஞெமிர்
 நாமிகு பாரிட ரெண்ணில ராவன லத்ததி சைக்களிறு
 பேமுறு வெற்புற வன்னவை சூழ்பெரு மால்வரை யாய்த்தழைவான்
 தோமுறு காலுரு வாகவ டுக்கறு ளக்கெரி யாயெழுவான்.

(இ - ள்.) நீண்ட கிரவுஞ்சம் சக்கரவாளகிரியைச் சூழ்ந்த பேரிருளாக அவன் அப்பேரிருளிடத்துப் பரந்த அச்சத்தை மிகுவிக்கின்ற சக்கரவாளமாக, கிரவுஞ்சம் நன்மை தருகின்ற திக்குயானைகளாக அத்திசை யானைகள் சூழ்ந்த சக்கரவாளகிரியாக அவன் தோன்றுவான். அம்மலையானது குற்றம் பொருந்திய காற்றாக அவன் அடைகின்ற நெருப்பாகத் தோன்றுவான்.

(வி - ம்.) "நாம்", "பேம்" என்பன அச்சப் பொருளுணர்த்தின