பக்கம் எண் :

68தணிகைப் புராணம்

(இ - ள்.) உலகத்தை உளவாக்குங்கால் உளவாக்கிக் காக்குங் காலத்துக் காத்து அழிக்கும் பருவம் நேர அழிக்கும் அருணிறைந்த பரசிவத்தை நேர விளைந்த செந்நெற்கதிர்களை அரியும்வகையைக் கருதினராகிச் சார்வார்கள்.

(வி - ம்.) ஆக்கும்பொழுதாக்கி என்றதற்கேற்ப அளிக்கும்பொழுது அளித்தெனக் கூட்டுக. பதம் - காலம்; நேர்தலும் - நேர; அருள்தேக்கும் பரம் - நிலங்கடந்தான் தாயதென்றாற்போல வாளா பெயராக நின்றது. நேர் என்பதை நேர என வினையெச்சமாக்குக. தாக்கும். வகை - ஈண்டறியும் வகை.

(121)

 தகவா யினுந்தா மளிசெய் தவென
 முகநே ரெதிர்வுக் குளமுன் னலர்மற்
 றுகவீழ் விளைவிம் பருறந் தெவரும்
 இகவா ளினிறுத் தனர்பின் னிடுவார்.

(இ - ள்.) உழவர்கள் யாவரும் (கதிர்களை யறுத்தல்) தகுதியாயினும் தங்களாற் காக்கப்பட்டனவென்று (அறுத்து) முகத்திற்கு நேரே பிடித்தற்கு உள்ளத்திற் கருதாதவராய் இவ்வயல்களிடத்து மிகச் சிந்த வீழ்கின்ற கதிர்களை அரிவாளால் அறுத்துப் பின்னே இடுவார்கள்.

(வி - ம்.) தகவாயினும் - அறுத்தல் தகுதியாயினும்; செய்த - செய்யப்பட்டன எனச் செயப்பாட்டு வினையாக்குக. முன்னலர் - கருதலராய்; முற்றெச்சம். மற்று : அசை. உகவீழ் விளைவு - சிந்த வீழ்கின்ற விளைவை என இரண்டாவது விரிக்க. இறுத்தனர் - இறுத்து, முற்றெச்சம். இக - முன்னிலையசை. இக - கெடவெனப் பொருளுரைப் பாருமுளர். உழவர் யாவரும் முன்னலராய் உகவீழ்ந்த விளைவை இவ்விடத்து மிகப் பின்னிடுவரென வினை முடிவு செய்க. கதிரை யறுத்துப் பின் போக்குதல் வழக்காறாதலின் முகநேரெதிர்வுக்குள முன்னலர் என்றார். உறந்து - உறவென என எச்சந் திரிந்துநின்றது.

(122)

 விளைவைத் தடிவார் வளைமின் கமடம்
 உளையக் கொலைசெய் தொருபா லிடுவார்
 திளைநல் வினையார்க் கொருசெய் தொழிலில்
 கிளைபல் பொருள்வாய்த் திடுகேண் மையவே.

(இ - ள்.) இன்பம் நுகர்தற்கேதுவாகிய ஆகூழுடையார்க்குச் செய்தொழிலொன்றினால் பலவாகக் கிளைக்கின்ற நற்பொருள்கள் வாய்க்கப்பெறு முறைமை யுலகிலுளவாதல்போல, நெற்கதிரையறுப்பார் சங்கும் மீனும் ஆமையுமாகிய இவைகள் வருந்தக்கோறலைச் செய்து ஒரு பக்கத்தே போடுவாரென்க.

(வி - ம்.) திளைத்தல் - அனுபவித்தல். நல்வினையார் - ஈண்டு ஆகூழுடையார். பலவாகக் கிளைக்கின்ற பொருள்; கேண்மை - முறைமை; விளைவு - ஈண்டு நெற்கதிர். உளைய - வருந்த.

(123)

 வயன்மீட் டுமெழுந் தமலர்ப் புதல்கள்
 குயவாய் விளைவொ டுகுறைந் தனவால்