பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்683

(இ - ள்.) கதிர்க் கடவுள் தேவர்கள் வழிபடுதலை யறிந்து யாமும் முருகனடிமலரை வணங்கப் போதுவோமென்று சேர்ந்தவன்போல அலையையுடைய கடலின்கட் டோன்ற இறைவன் நடத்திய திருமணக் காலத்து தேவர் முதலியோர் தொகலின் தென்றிசை நொய்ம்மையுற்றதை யறிந்து ஏவிதலால் தென்றிசைக்கண் வடக்கின்கண்ணுள்ள மலைகள் பெயர்வனவற்றை யொப்ப வீரர்கள் தேர் பக்கலில்வர நடந்தன னென்க.

(வி - ம்.) படர்குதும் : தன்மைப் பன்மை வினைமுற்று. இஃது இல்பொரு ளுவமையணி. பாற்கரன் - ஞாயிறு. புடவி - நிலம். நம் பிரான் - சிவபிரான். வடதலை - வடநாடு. புரைய - உவமவுருபு. வயவர் - வீரர்.

(125)

 மண்ணிடை யாங்காங் கிறையமர் தலங்கள்
           வழியினேர் பட்டன பாரா
 மண்ணியாற் றருகி னிறுத்துழி மணித்தேர்
           வார்கொடி புடைத்தலுந் துருவன்
 நண்ணிய பிணிப்பிற் றீர்ந்துவீழ்ந் தென்ன
           நரலைவீழ்ந் ததுகதி ரதுகண்
 டுண்ணிறை களிப்பி னெழுந்தென மாறா
           முடுபதி யொளிர்ந்தது விசும்பில்.

(இ - ள்.) நிலவுலகின்கண் இறைவ னெழுந்தருளிய வழிக்க ணெதிர்ப்பட்டனவாகிய இடங்களைத் தரிசித்துத் திருமண்ணி யாற்றங் கரையின் பக்கலிற் றங்கிய காலத்து, அழகிய தேரிற்கட்டிய நீண்ட கொடி தாக்க, துருவனென்னும் விண்மீன்றான் பொருந்திய கட்டினின்றும் நீங்கி வீழ்ந்தாற்போல வெங்கதிர் கடலுள் வீழ்ந்தது. அங்ஙனம் வீழ்தலைக் கண்ணுற்று வானின்கண் அவ் வெங்கதிர்க்கு மாறாகி வெண்கதிர் உள்ளே நிறைந்த களிப்பினோடு விளங்கிய தென்க.

(வி - ம்.) நரலை - கடல். முருகன் தங்கிய ஊர் இக்காலத்து திருச்சேய்ஞலூர் என்று பெயர்பெற்றது. துருவன் - ஒருவிண்மீன்.

(126)

 இரவவ ணிருந்து காலையி லீசன் பூசனை யியற்றியவ் வீசன்
 பரவுபல் படைக்கு நாயக மான படைக்கலங் கொடுத்திடப் பெற்று
 விரவிய சேனை யொடும்வழிக் கொண்டு வெஞ்சுரங் குளிர்தகக் கடந்து
 வரமலி செந்தி லடுத்தவ ணினிது வதிந்தன னென்னையா ளுடையான்.

(இ - ள்.) இரவின்கண் ஆண்டிருந்து நாட்காலையில், இறை பூசனை யைச் செய்து அவ்விறைவன், பலருந் துதிக்கும் பல படைக்கலங்கட்குத் தலைமையான பாசுபதம் கொடுக்கப்பெற்றுக் கலந்த படையொடு வழிக்கொண்டு, வெவ்விய காடு குளிர்ச்சியடைய நீங்கி என்னை அடிமை கொண்டவனாகிய முருகன் உயர்ச்சிமிக்க திருச்சீரலைவாயைப் பொருந்தி ஆண்டிருந்தன னென்க.