பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்693

(இ - ள்.) இரண்டாயிர வெள்ளமென்னும் வீரர்களும், ஓராயிரம் வெள்ளம் குதிரைகளும், ஆயிரம் வெள்ளம் யானைகளும், ஆயிரம் வெள்ளந் தேர்களும், படைத்தலைவருந் தன்னைச் சூழ்ந்துவரச் சூரன் பெற்றவனாகிய வச்சிரவாகு வென்பவன் தூதுவன் யாங்குளா னென்று போரினைச் செய்யப் போர்க்களத்தைக் கருதி வீரவாகு தேவருக்கெதிரே போந்தனன். அங்ஙனம் போந்தகாலை என்க.

(வி - ம்.) வெள்ளம் - ஒருபேரெண். சூர் - சூரபதுமன்.

(146)

 அண்டம் விண்டெனத் தோள்புடைத் தார்த்தன
           னாடமர் விழைவீரன்
 மண்டு தானைகள் வெயர்த்தன வயிர்த்தனன்
           மறமிகு சூர்மைந்தன்
 கொண்ட தானையைச் செலுத்தினன் றானையுங்
           குலாய்ப்படை யொருங்குய்த்த
 மிண்டன் மெய்யவை யழுந்திநெய்த் தோருக
           வெகுண்டனன் மேற்கொண்டான்.

(இ - ள்.) வெற்றியைத் தருகின்ற போரை விரும்புகின்ற வீரவாகுதேவர் அண்டம் பிளந்ததென்று சொல்லும்வண்ணம் தோள்களைத் தட்டி முழக்கஞ் செய்தான்; அங்ஙனம் முழக்கஞ் செய்தலைக் கேட்ட நெருங்கிய படைகள், வியர்வையடைந்தன. வீரமிகுந்த சூரன் மகன் ஐயுற்றனனாகித் தன்வயத்தில் கொண்டுள்ள படையைச் செலுத்தினான். படைகளும் போரிற் பொருந்தி, ஒருசேரப் படைக்கலங்களைச் செலுத்தின. வலியினையுடையானாகிய வீரவாகு மெய்க்க ணப்படைகளழுந்தலாற் செந்நீர் உகாநிற்கச் சீற்றமுற்றுப் போரினை மேற்கொண்டா னென்க.

(வி - ம்.) அயிர்த்தல் - ஐயுறல். மிண்டன் - ஈண்டு வீரவாகு.

(147)

வேறு

 இரத மாயிரத் திரதமா யிரம்புடைத் திறுத்தான்
 கரிக ளாயிரத் தாயிரங் கரிகடாய்க் கவிழ்த்தான்
 பரிக ளாயிரத் தாயிரம் பரிவிட்டுப் படுத்தான்
 சரிய வீரரா யிரரையா யிரவராற் றகர்த்தான்.

(இ - ள்.) ஆயிரந் தேர்களை யெடுத்து அத்தேர்களால் ஆயிரந் தேர்களை யடித்துக் கெடுத்தான்; ஆயிரம் யானைகளை விட்டெறிந்து ஆயிரம் யானைகளை முகங்கவிழும்படி செய்தான். ஆயிரங் குதிரைகளை விட்டெறிந்து ஆயிரங் குதிரைகளைக் கொன்றனன். ஓடும்படி ஆயிரம் வீரர்களை ஆயிரம் வீரர்களாற் சிதறும்படி செய்தான்.

(வி - ம்.) சரிதல் - ஓடல்.

(148)