பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்695

(இ - ள்.) சூரர்மைந்தன் அம்பைச் செலுத்தலால் வருத்தமுற்று வாளி பாயப்பெற்ற வீரவாகுதேவர் தாவிச்செல்லுங் குதிரையோடு பாகனும், நெரிந்து தூளியாக ஒள்ளிய தேரினை உதைத்தனன். பகைவனாகிய அவ்வசுரன் வேறு தேரின்கண் விரைந்து பாய்ந்து வீரவாகுதேவர் நெற்றியில் ஆயிரம் அம்புகளை ஆராய்ந்து செலுத்தினன். வீரவாகுதேவர் அத்தேரினைக் கையாலெடுத்து வானின்கண் வீசினா ரென்க.

(வி - ம்.) நேரான் - பகைவன்.

(152)

 வீழு முன்னவண் வேறுள சேமத்தே ரனைத்தும்
 பூழி செய்தனன் விழுந்துதேர் கெடநின்றோன் பொருவில்
 வாழி வாங்கினன் றொடுக்குமுன் வார்சிலை யிறுத்தான்
 ஊழி னன்னநாந் தகமுரீஇ யினரிரு வோரும்.

(இ - ள்.) அத்தேர் நிலத்தின்கண் விழுமுன்னர் அவ்விடத்துப் பாதுகாவலிலுள்ள எல்லாத் தேரினையும், நீறாம்படி செய்தனன். (வானின்கண் ணெறிந்த) தேர் கீழே விழுந்துகெட நின்றோனாகிய அசுரன் போரிற்குரிய வில்லினை வளைத்துத் தொடுக்குமுன்னர் வீரவாகு தேவர் நீண்ட வில்லினை யொடித்தார். செய்வினைப் பயனைச் செய்தான் மாட்டுக்கொண் டுய்த்தலிற் றவறாத ஊழினையொத்த வாளினை இரு வரும் உறையினின்று முருவினார்க ளென்க.

(வி - ம்.) தன்பயனைத் தப்பாது செய்துவிடு மூழினைப்போலத் தன்றொழிலைத் தப்பாது செய்தலில் "ஊழையொத்த நாந்தகம்" என நாந்தகத்திற்கு ஊழை யுவமையாக்கிக் கூறினார். வாழி : அசை.

(153)

 பொருது மேல்வையிற் பூரிய னோச்சுநாந் தகக்கை
 இருநி லத்திழித் தனனவ னேந்தொரு தண்டம்
 மரும மோச்சினன் வருமுனர்த் துணித்திடங் கழிகொண்
 டருவி செம்புனல் கொளமுடி யறுத்தனன் வீரன்.

(இ - ள்.) இருவரும் போரினைச் செய்யும் ஏல்வைக்கண் கீழோனாகிய சூர்மகன் வீசிய வாளினையுடைய கையைப் பெரிய பூமியின்கண் விழும்படி வெட்டினான். அவன் மற்றொரு கையின்கணேந்திய தண்டத்தினை வீரவாகுவின் மார்பின்க ணெறிந்தான். அத்தண்டம் வருமுன்னர் அதனை வீரவாகு துணிசெய்து நெருங்கி மலையினின்றிழியும் அருவிப் புனல்போலச் செந்நீரொழுக்கங் கொள்ளத் தலையினை அறுத்தா னென்க.

(வி - ம்.) இடங்கழிகொண்டு - நெருங்கி.

(154)

 ஒழிந்த வச்சிர வாகுதன் னுடலினைப் பொதிர்த்திட்
 டழுங்கப் போதுவ னேயென வஞ்சினான் போலச்
 செழுங்க திர்த்தின கரன்கடற் கரந்தனன் செருக்கொண்
 டெழுந்து ளார்களு மில்லையா தலின்விறல் வாகு.