பக்கம் எண் :

696தணிகைப் புராணம்

(இ - ள்.) இறந்த சூர்மகனாகிய வச்சிரவாகு வென்பான் என்னுடலினைப் பிளந்துகொண்டு யான் வருத்தமுற வீரசுவர்க்கத்திற்குச் செல்வனே என்று அஞ்சினன்போலச் செழித்த கதிர்களையுடைய செங்கதிர்க்கடவுள் கடலின்கண்ணே ஒளித்தான்; போரினை மேற்கொண்டெழுந்துளார்களில் ஒருவரும் இல்லாதிறத்தலான் வீரவாகு தேவர்.

(வி - ம்.) போரிலிறந்தார் செங்கதிர் மண்டிலத்தைப் பிளந்து, அரம்பை முதலியோர் எதிர்கொள்ள வீரசுவர்க்கம் புகுதல் முறையாகலின் இவ்வச்சிரவாகுவுந் தன்னைப் பிளந்து செல்வானென்னு மச்சத்தால் ஒளித்தானென்பார். தன்னுடலினைப் பொதிர்ந்திட்டு அழுங்கப் போதுவனே யென அஞ்சினான்போலக் கடற்கரந்தன னென்றார். பொதிர்த்தல் - துளைத்தல்.

(155)

 முந்து மண்ணலை யிகழ்ந்தவ னூர்முழு தழித்தாம்
 வந்த வந்தபல் வீரர்க ளுயிர்விசும் புறுத்தாம்
 மைந்த னாக்கைமண் படுத்தன மறலுந ரில்லை
 அந்தி பட்டது போதுமென் றவணொரீஇ மீண்டான்.

(இ - ள்.) யாவரினு முதன்மையான தலைவனாகிய முருகனை இகழ்ந்துரைத்தவனாகிய சூரன் நகர முழுவதையும், அழித்தேம். போரினுக்கு வந்த சுத்தவீரர்க ளுயிரினை வானின்கட் சேர்த்தேம். சூரன்மகனாக்கையை மண்ணின்கண் விழும்படிச் செய்தேம். இனிப் போரில் நம்மோடு மாறுபடுபவ ரொருவரு மிலர். மாலைக்காலமும் வந்தது. இனிநாம் போவேமென்று அவ்விடத்தினின்று திரும்பினான் வீரவாகு.

(வி - ம்.) மறலுதல் - மாறுபடுதல்.

(156)

 இலங்கை புக்கனன் புகுதலு மென்மகன் படைஞர்
 குலங்கெ டப்பொரு தாய்நினைக் கொல்வலென் றியாளி
 விலங்கு மாமுக மாயிரங் கொண்டவன் விடைப்பத்
 துலங்கு போரினா லவனையுந் தொலைச்சிவிண் ணெழுந்தான்.

(இ - ள்.) அங்ஙன மீண்ட ளீரவாகு இலங்கையென்னும் நகரின் கட் புகுந்தான். அங்ஙனம் புக்கவளவில் யாளிமுக மாயிரங்கொண்ட வோரவுணன் என் மகனையும் கூட்டமாகிய படையினரையும் பொருது கொன்றாய்; நின்னைக் கோறல் செய்வேனென்று மாறுபாடுகொள்ள விளங்குகின்ற போரின்கண் அவ்வியாளி முகனையுங் கெடுத்து வானின் கண் ணெழுந்தன னென்க.

(வி - ம்.) சிங்கமுகத்தையுடைய வோர் அவுணன், இவன் சூரிளவலாகிய சிங்கமுகனலன்.

(157)

 செந்தி லான்றிருச் சேவடி தாழ்ந்துசென் றுரைத்து
 வந்தவா றெலா நுவன்றனன் வதிந்தனன் வீரன்
 மைந்தன் பட்டது கேட்டழிந் தரற்றுமன் னவன்முன்
 முந்து போயவொற் றொற்றிவந் துரைத்தன முழுதும்.