பக்கம் எண் :

698தணிகைப் புராணம்

 நுனித்த கேள்விய ரேனுநூ லாளரை யன்றித்
 தனித்தொ ரெண்ணமு மெண்ணலர் தரணிகாப் பாளர்
 இனித்த ழூஉம்வகை யிதுவென வுரைமின்க ளென்றான்
 பனித்து விண்ணவர் கேட்டொறும் பருவருந் திறலோன்.

(இ - ள்.) தேவர்கள் தன் பெயரைக் கேட்குந்தொறும் கேட்குந்தொறும் நடுங்கித் துன்புறுதற் கேதுவாகிய திறலினையுடையனாகிய சூரன் உலகபாலருருவாய் நின்றுலகம் காக்கும் இறைவர்கள் பல நூல்களினும் நுனித்துச் சென்ற கல்வி கேள்வியுடையாரேனும் தனியாக விருந்து வோரெண்ணமு மெண்ணுதல் செய்யார். (ஆதலான் இப்பகையை முடித்தற்கு) இனித் தழுவும்முறை இற்றென உரைமின்கள் என்றன னென்க.

(வி - ம்.) திறலோன், தரணி காப்பாளர் எண்ணலர் ஆதலான் உரைமின்கள் என உரைத்தானென வினைமுடிபு செய்க.

(161)

 மதுக்கு டித்தவர் குழாமென வரதனம் படையை
 நுதுக்கு மென்மரு நொறிலிலா னவனைநம் படைசென்
 றதுக்கு மென்மரு நீபொர லிழிவியா னழல்காய்
 பதுக்கை மேய்ந்தெனப் படுப்பல்சென் றென்மரு மானார்.

(இ - ள்.) கள்ளினை யுண்டார் கூட்டம் (வரன்முறையின்றிப்) பிதற்றல்போல மேலானவனாகிய முருகன் அழகிய படையை நம் படைகள் சென்றழிக்குமென்று மொழிவாரும், விரைவில் அவ்விடத்து அம்முருகனை நம்படைகள் சென்றடிக்குமென்று சொல்வாரும், நீ சென்று போரினைச் செய்தலிழிவாகும். நான், தீயானது காய்ந்த சிறு தூறுகளை யுண்டாற்போலச் சென்று கொல்வேன் என்று சொல்வாரு மாயின ரென்க.

(வி - ம்.) நுதுத்தல் - அழித்தல். இதனை "நெய்யால்எரி நுதுப்பே மென்றற்றால்" என்னும் திருக்குறளடியா னுணர்க. நொறில் - விரைவு. ஆன் - அவ்விடம். அதுக்கல் - அடித்தல், இதனைக் "கையால் வயிறதுக்குவார்" என்னும் சிந்தாமணியா னறிக. பதுக்கை - சிறுதூறு; காய்ந்ததூ றென்க.

(162)

 தத்த நெஞ்சினுட் டோற்றியாங் குரைப்பவர் தம்மைக்
 கைத்த லத்தினா லடக்குபு காழ்படு சினத்தான்
 ஒத்த வாறெலா முரைப்பதி னுறுபய னெவன்கொல்
 அத்த கேளெனக் கரைவனா லரிமுகத் திளவல்.

(இ - ள்.) தன்வலியும், மாற்றான்வலியும் ஓராது தத்தம் நெஞ்சினுட்டோற்றியவாறே தம் மேம்பாட்டுரை கூறுகின்றவர்களைக் கையினாலடக்கி வயிரம் பொருந்திய செற்றத்தா னெஞ்சினுட் டோன்றிய விதமெல்லாமுரைப்பதனா லடையத்தக்க பயனொன்றுமில்லை. தலைவனே கேட்பாயாக வென்று சிங்கமுகன் சொல்வான்.