பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்699

(வி - ம்.) 'எவன்' என்னும் வினாப்பெயர் ஈண்டின்மை குறித்து நின்றது. கொல் : அசை.

(163)

 வேட்ட தாறுமா முகன்சிறை விடலது செயினம்
 மாட்டு வந்துறு மிடரெவன் வச்சிர னவுணர்
 ஈட்ட முன்னெலா மலைத்ததற் கெதிரின்று காறும்
 மூட்டி வெந்துயர் சிறையின்முள் காந்தன னவன்சேய்.

(இ - ள்.) அறுமுகத் தொருவன் நம்பால் விரும்பியது தேவர்களைச் சிறைவீடு செய்தலே யாம். அத் தேவர்களைச் சிறைவீடு செய்யின் நம்மாட்டுப் பொருந்தும் குற்றமொன்று மில்லையாம். வச்சிராயுதத்தை யுடைய இந்திரன் அவுணர் கூட்டங்களையெல்லாம் முன்னர்க் கொன்ற தற்கெதிராக இன்றளவும் அவன் மகனாகிய சயந்தன் வெவ்விய துன்ப மூட்டப்பெற்றுச் சிறையின்கண்ணே தலைகுனிந்திருந்தன னிஃதொன்றோ என்க.

(வி - ம்.) முள்காந்திருந்தனன் - தலைகுனிந்திருந்தனன். இதனை "பசுப்போல்வார் முற்பட்டாற் பிற்பட்ட சான்றோர், முசுப்போல முள் காந்திருப்பர்" என்னும் தனிச் செய்யுளா னறிக. எவன் என்றது இன்மை குறித்து நின்றது.

(164)

 குமைக்கு மாற்றலி னமக்குமே லிலையுயிர்க் குழுவின்
 அமர்க்கட் டோல்வியுண் டாகுமேற் றுணைவர மளித்த
 உமைக்கு நாயக னேயல திலையுவன் றானே
 நமக்கு மாற்றல னெனச்சிறு குழவியாய் நயந்தான்.

(இ - ள்.) மக்கட்டொகுதியின்கண் வைத்துக் கோறல் செயுந்தன்மையில் நமக்கு மேம்பட்டவ ரொருவருமின்றாம். போரின்கண்ணும் நமக்கு மேம்பட்டவ ரொருவருமின்றாம். போரின்கண் நமக்குத் தோல்வியுளவாமேல், ஏனையோரால் வெல்லப்படாமையும், தன் சத்தியாலழிதலுமாகிய இருவரத்தையும் முன்னரருளின உமையம்மை யாருக்குத் தலைவனாகிய இறைவனே யல்லாமல் வேறொருவருமில்லையாம். அவ்விறைவனே நமக்கு மாற்றானென்று சொல்லும்படி சிறு மகவாகிப் போரை விரும்பினா னென்க.

(வி - ம்.) பசுக் கூட்டங்களில் கோறல் செய்யுந் தொழிலில் நம்மினும் மேம்பட்டவ ரின்றென்பது தெளிவென்பான் உயிர்க்குழுவில் நமக்கு மேம்பட்டவரில்லை என்றான். இஞ்ஞான்று நமக்குத் தோல்வி காணப்பட்டமையால் இருவரங்களை நமக்களித்த பதிப்பொருளே. இவ் வடிவங்கொண்டு தெவ்வாய் வந்ததென்பான், "உமைக்கு நாயகனே நமக்கு மாற்றலனெனச் சிறுகுழவியாய் நயந்தா" னென்றார். உவன் - சிவன். துணைவரம் - இரண்டுவரம். அவையாவன : பிறரால் வெல்லாமை, சத்தியாலழித லென்க.

(165)

 அளித்த நல்வர மழிக்குமே யீசனென் றயிர்த்தல்
 தெளித்த வாயுளீ ரெட்டலா லிலையென்றுஞ் சிவணக்